துலாம் - 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Webdunia
புதன், 28 டிசம்பர் 2016 (23:49 IST)
துணிச்சல் மிக்கவர்களே! உங்களின் ராசிக்கு 3-ம் வீட்டில் லாபாதிபதியான சூரியன் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை வரும். தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள்.


 

தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மற்றவர்களின் ரசனைக் கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும். மேல்மட்ட அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் இந்த 2017-ம் ஆண்டு பிறப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிரபலங்களின் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். பணம் வரத் தொடங்கும்.

உங்களிடம் பழகும் சொந்த-பந்தங்களின் பலம், பலவீனத்தை அறிந்து செயல்படத் தொடங்குவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். வழக்கு சாதகமாகும். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். அம்மான், அத்தை வகையில் மதிப்புக் கூடும். வர்த்தகர்கள் சங்கம், இயக்கம் இவற்றில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டிற்கு குடிப்புகுவீர்கள். சிலர் வேற்று மாநிலம், அயல் நாடு சென்று வருவீர்கள். வேலைக்கு விண்ணபித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் நல்ல குடும்பத்திலிருந்து வரன் அமையும்.

11.4.2017 முதல் 26.5.2017 வரை உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய் அமர்வதுடன் செவ்வாயை சனி பார்க்கயிருப்பதாலும் வீண் விரைய செலவுகள், முன் கோபம், இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைப்பாடு, மனைவிக்கு மாதவிடாய் கோளாறு, அடிவயிற்றில் வலி வந்து போகும். சொத்து விற்பதாக இருந்தால் ஒரே தவணையாக பணத்தை கேட்டு வாங்குங்கள். சகோதரங்கள் உங்களை தவறாக புரிந்துக் கொள்வார்கள்.

26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் கேது நிற்பதால் பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டேப் போகும். அவர்களை அன்பாக நடத்துங்கள். உங்களுடைய கனவுகளை அவர்கள் மீது திணிக்க வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். கர்ப்பச் சிதைவு ஏற்படக்கூடும். பூர்வீகச் சொத்தை சரியாக பராமரிக்க முடியவில்லையே என வருத்தப்படுவீர்கள். ராகு லாப வீட்டில் நிற்பதால் வசதி, வாய்ப்புகள் ஒரளவு பெருகும். ஷேர் மூலம் பணம் வரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். புது பதவி, பொறுப்புகள் தேடி வரும். மூத்த சகோதர வகையில் ஆதரவுக் கிட்டும். சமூக சேவையில் ஈடுபாடு அதிகரிக்கும். பயணங்களால் புத்துணர்ச்சிப் பெறுவீர்கள்.

ஆனால் 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை கேது 4-ம் வீட்டிலும், ராகு 10-ம் இடத்திலும் அமர்வதால் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். தோல்வி மனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். அவ்வப்போது நேர்மறை எண்ணங்களை உள்மனதில் வளர்த்துக் கொள்வது நல்லது. வழக்கு விவகாரங்களில் அடிக்கடி வழக்கறிஞரை மாற்ற வேண்டாம். புறநகர் பகுதியில் இடம் வாங்கி வைத்திருப்பவர்கள் அவ்வப்போது உங்களுடைய இடத்தை கண்காணித்து வருவது நல்லது. சிலர் உங்களுடைய இடத்தை ஆக்கிரமிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

ட்ரைவிங் லைசன்ஸ், பாஸ் போட் இவற்றையெல்லாம் புதுப்பிக்க தவறாதீர்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளையும் உடனுக்குடன் செலுத்துவது நல்லது. இலவசமாக சில கூடாப்பழக்க வழக்கங்களை உங்களைத் தொற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. எனவே உங்களுடைய அடிப்படை நடத்தைக் கோலங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள். உங்களுடைய தனித்தன்மையை இழந்து விடாதீர்கள். இதுவரை கட்டிக் காப்பாற்றிய கௌரவத்தை இழந்துவிடுவோமோ, அசிங்கப்பட்டுவிடுவோமோ என்ற ஒரு கவலைகளும் தலைத்தூக்கும்.

அந்தஸ்து புகழுக்காக கைக்காசை கரைத்துக் கொண்டிருக்காதீர்கள். பெரிய விஷயங்களில் தன்னிச்சையாக முடிவெடுக்காமல் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பாருங்கள். முடிந்த வரை இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உடல் எடை அதிகமாகும். நேரம் தவறி சாப்பிட வேண்டாம். சின்ன சின்ன உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. தாயாருக்கு கழுத்து எலும்புத் தோய்வு, மூட்டு வலி, கை, கால் வலி, அசதி வந்துப் போகும். அவருடன் மனத்தாங்கலும் வரக்கூடும்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை உங்களின் சேவகாதிபதியும்-சஷ்டமாதிபதியுமான குரு உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் மறைந்து நிற்பதால் திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது திட்டமிட்டாலும் முடியாமல் போகும். தூக்கமின்மை, கனவுத் தொல்லை, ஒருவித படபடப்பு வந்துச் செல்லும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் நீங்களே எடுத்து நடத்துவீர்கள். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். கோவில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும்.

ஆனால் 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக அமர்வதால் ஒரு தேடலும், நிம்மதியற்றப் போக்கும் அதிகரிக்கும். அவ்வப்போது கோபப்படுவீர்கள். யாரிடமாவது சண்டைபோட வேண்டுமென நினைப்பீர்கள். சாப்பாட்டில் உப்பை குறையுங்கள். இரத்த அழுத்தம் அதிகமாகும். பெரிய நோய் இருப்பதாக நினைத்து பயம் வரும். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். அல்சர், மஞ்சள் காமாலை, வாயுக் கோளாறால் நெஞ்சு வலி, யூரினரி இன்பெக்ஷன் வரக்கூடும். உணவில் காய்கறிகள், பச்சை கீரை வகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீரை காய்ச்சி அருந்துங்கள். சில நேரங்களில் தலைச்சுற்றல் வரும். ஆழ்ந்த உறக்கமில்லாமல் போகும்.

உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக நினைத்துக் கொள்வீர்கள். வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் கணவன்-மனைவிக்குள் பிரிவு ஏற்படக்கூடும். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எனக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனை வருகிறது. எனக்கு அதிர்ஷ்டமே இல்லையா, எதைத் தொட்டாலும் இப்படி பிரச்னையாகவே இருக்கிறதே, யாரும் என்னை மதிப்பதைப் போல் தெரியவில்லையே என்றெல்லாம் அவ்வப்போது புலம்புவீர்கள். உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி முடிவுகள் எடுக்க வேண்டாம். முதுகுக்குப் பின்னால் விமர்சிப்பவர்களை பற்றி கவலைப்படாதீர்கள்.

14.12.2017 வரை சனி 2-ல் அமர்ந்து ஏழரைச் சனியின் இறுதி கட்டமான பாதச் சனி நடைப்பெற்றுக் கொண்டிருப்பதால் இருப்பதால் பல் வலி, காது வலி வந்து நீங்கும். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது. பிள்ளைகளை படிப்பின் பொருட்டு கசக்கிப் பிழிய வேண்டாம். அவர்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். சில உண்மைகளை சில இடங்களில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கி வைப்பது நல்லது. பணப்பற்றாக்குறை ஏற்படும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள்.

வருடத்தின் இறுதியில் 15.12.2017 முதல் 3-ம் வீட்டில் சனி அமர்வதால் சோர்ந்திருந்த நீங்கள் புத்துயிர் பெறுவீர்கள். வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். உங்கள் இருவருக்கும் இடையே குழப்பங்களை ஏற்படுத்தியவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். தைரியம் கூடும். உங்களை ஏளமாகப் பேசியவர்களெல்லாம் வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

வியாபாரிகளே! ஏற்ற-இறக்கங்கள் இருந்துக் கொண்டேயிருக்கும். லாபம் சுமாராக இருக்கும். சின்ன சின்ன நட்டங்களும், ஏமாற்றங்களும் வரும். சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்ப சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பாருங்கள். முதலீடுகளையும் மாற்றுவீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் திடீரென்று பணியை விட்டு விலகுவார்கள். புது சலுகைகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். துரித உணவகம், நிலக்கரி, இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போங்கள். ஜனவரி, ஆகஸ்டு, டிசம்பர் மாதங்களில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

உத்யோகஸ்தர்களே! நாளுக்கு நாள் வேலைச்சுமை கூடிக் கொண்டேப் போகும். அலுவலக ரகசியங்களை வெளியே சொல்ல வேண்டாம். உங்களின் திறமையை பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். வேலையில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற சந்தேகம் தினந்தோறும் எழும். நீங்கள் எவ்வளவு உழைத்தாலும் நற்பெயர் கிடைக்காது சின்ன சின்ன குறைகளை நேரடி அதிகாரி சுட்டிக் காட்டிக் கொண்டேயிருப்பார். சக ஊழியர்கள் செய்யும் தவறுகளை மேலிடத்திற்கு தெரிவித்துக் கொண்டிருக்காதீர்கள். உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். முறைபடி தேர்வெழுதி வெற்றி பெற்றும் பதவி உயர்வு, சலுகைகள், சம்பள உயர்வை பெற போராட வேண்டி இருக்கும்.

கன்னிப்பெண்களே! யதார்த்தமாகவும், விளையாட்டாகவும் நீங்கள் எதையோ சொல்லப் போய் அதை சிலர் பெரிதாக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். ஃபேஸ் புக், டிவிட்டரை கவனமாக பயன்படுத்துங்கள். சிலர் உங்களுடைய பெயருக்கு கலங்கம் விளைவிக்க முயற்சிப்பார்கள். தோலில் நமைச்சல், அடிவயிற்றில் வலி வந்துப் போகும். படித்த துறையில் வேலை கிடைக்காவிட்டாலும் கிடைக்கும் வேலையில் சேருவது நல்லது.

மாணவ-மாணவிகளே! டி.வி., சினிமா எல்லாம் விட்டு விட்டு படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். மறதியால் மதிப்பெண் குறையும். நெருக்குத் தீணிகளை குறையுங்கள். அறிவியல், கணித சூத்திரங்களையெல்லாம் எழுதிப் பார்ப்பது நல்லது. நல்லவர்களின் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.

கலைத்துறையினரே! வருவதாக இருந்த வாய்ப்புகள் கை நழுவிப் போகும். வயதில் குறைந்த கலைஞர்களால் உதவிகள் கிடைக்கும்.

ஆகமொத்தம் இந்த 2017ம் ஆண்டு சகிப்புத்தன்மை தேவை என்பதையும் தன் கையே தனக்குதவி என்பதையும் உணர்த்தும்.
அடுத்த கட்டுரையில்