அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் செய்யவேண்டியது என்ன...?

Webdunia
மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவனே ஆஞ்சநேயன். அந்த தினம் அனுமன்  ஜெயந்தியாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. 

ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி அந்த  ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும். குடும்பத்தில் இன்பம் பெருகும். 
 
ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி,  வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும். அனுமன் ஜெயந்தி  அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி உபவாசம் தொடங்க வேண்டும். அருகில் இருக்கும் ராமர்  அல்லது அனுமன் கோவிலுக்குச் சென்று, அனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். வெற்றிலை மாலை, வெண்ணெய் காப்பு சாத்தியும் வணங்கலாம்.  அனுமனுக்கு வாலில் தான் சக்தி அதிகம்.
 
அதனால்தான் ஆஞ்சநேயர் வாலில் குங்குமம் வைத்து வழிபடுகிறோம். பக்தி சிரத்தையுடன் ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டு வால் தோன்றும் இடத்தில்  இருந்து தினமும் சந்தனம் பூசி, குங்கும திலகம் வைத்துக் கொண்டு வர வேண்டும். வாலின் நுனியை அடைந்ததும் கலைத்து விட்டு மறுபடியும் பொட்டு வைக்க  வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுப தினத்தில் வடை மாலை சாத்தி வழிபட வேண்டும்.
 
பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே  பருகி உபவாசம் இருக்க வேண்டும். மதிய வேளையில் உணவு எடுத்துக்கொள்ளலாம். இரவில் ராமநாமம், ஆஞ்சநேயர் அஷ்டோத்திரங்கள், சுலோகங்கள் கூறி வழிபட வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்