ராகு & கேது பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்!

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2017 (11:50 IST)
ஆர்பாட்டம் செய்யாமல் அகிம்சைவழியில் சென்று நினைத்ததை அடைபவர்களே! உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும்  இணைந்து 27.7.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார் என்பதை  பார்ப்போம்.
 
ராகுவின் பலன்கள்:
 
இதுவரை உங்களின் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்திருந்து உங்களை பல பிரச்னைகளிலும் மூழ்கடித்து எதையுமே  முழுமையாக யோசிக்க முடியாமல் திணறடித்தாரே! தாயாருக்கு ஆரோக்ய குறைவையும், அவருடன் பிரிவையும்,  கசப்புணர்வுகளையும் தந்தாரே! அடுக்கடுக்காக வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளையும் கொடுத்தாரே! அப்படிப்பட்ட  ராகுபகவான் இப்பொழுது உங்களுடைய ராசிக்கு 3&ம் இடத்திற்கு வந்தமருவதால் இனி எத்தனைத் தடைகள் வந்தாலும்  அதையெல்லாம் தகர்தெறிந்து முன்னேறுவீர்கள். மாதக் கணக்காக கிடப்பில் இருந்த காரியங்களையெல்லாம் ஒவ்வொன்றாக  முடித்துக் காட்டுவீர்கள். எதிலும் வெற்றி உண்டாகும். கழுத்தை நெறிக்குமளவிற்கு கடன் பிரச்னையில் தவித்தீர்களே!  அவற்றையெல்லாம் பைசல் செய்யுமளவிற்கு பணவரவு உண்டு. வர வேண்டிய பணமும் கைக்கு வரும். வி.ஐ.பிகளை சரியாகப்  பயன்படுத்தி முன்னேறுவீர்கள். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். ஷேர் லாபம் தரும். சோர்ந்துப் போயிருந்த உங்கள்  முகத்தில் இனி புன்னகை தவழும். தாயாருடனான மோதல்கள் நீங்கும். அவருக்கிருந்த மூட்டு வலி, சர்க்கரை நோய் வெகுவாக  குறையும். உடல் நலம் சீராகும். ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு இனி குடும்பத்தில் அங்கீகாரம் கிடைக்கும். மதிப்புக் கூடும்.  கணவன்&மனைவிக்குள் ஈகோவால் இருந்த இடைவெளி குறையும். தாம்பத்யம் இனிக்கும். குழந்தை பாக்யம் கிட்டும்.  பிள்ளைகளின் வருங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்கும்  யோகம் உண்டாகும். உதாசீனப்படுத்திய உறவினர்களெல்லாம் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துக் கொள்வார்கள். பெரிய  நோய் இருக்குமோ என்ற பயம் விலகும். கனவுத் தொல்லையால் அவ்வப்போது தூக்கமில்லாமல் போனதே இனி ஆழ்ந்த  உறக்கம் வரும். இளைய சகோதர வகையில் சில நேரங்களில் மனஸ்தாபங்கள் வந்தாலும் பாசம் குறையாது.  வீட்டில்  தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். அரைக்குறையாக நின்று போன வீடு கட்டும் பணியைத்  தொடங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். விரைந்து முடித்து கிரகபிரவேசம் செய்வீர்கள். சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக்  கட்டுவீர்கள். தள்ளிப் போன வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.             
 
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்களின் தன&பூர்வ புண்யாதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.2017 முதல் 4.4.2018 வரை ராகுபகவான்  செல்வதால் புதிய சிந்தனைகள் உதயமாகும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்தை விரிவுப்படுத்தி,  அழகுப்படுத்துவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை  நிறைவேற்றுவீர்கள்.
 
5.4.2018 முதல் 10.12.2018 வரை ராகுபகவான் உங்களின் யோகாதிபதியான சனிபகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் திடீர்  திருப்பங்கள் உண்டாகும். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். புது பதவி, பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும்.  தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும்.
       
உங்களின் அஷ்டம&லாபாதிபதியான குருபகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4&ம் பாதம் கடக ராசியில் 11.12.2018 முதல் 13.2.2019  முடிய ராகுபகவான் பயணிப்பதால் வீண் அலைச்சல், பணப்பற்றாக்குறை, மூத்த சகோதர வகையில் கருத்து மோதல், சிறுசிறு  விபத்து வந்து நீங்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை  நினைத்து வருந்துவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். அடிவயிற்றில் வலி, ஒற்றை தலை வலி, நெஞ்சு எரிச்சல், செரிமானக் கோளாறு வந்துப் போகும்.
  
கன்னிப் பெண்களே! காதலில் குழப்பம், கல்வியில் தோல்வி, கல்யாணத்தில் தடை என அடுக்கடுக்கான பிரச்சனைகளால் நிலைக் குலைந்துப் போனீர்களே! இனி உங்களுக்கு நல்லதே நடக்கும். வீட்டிஇல் பார்க்கும் வரனே முடியும். வேலையும் கிடைக்கும். நல்லவர்கள் அறிமுகமாவார்கள். பெற்றோர் பாசமழைப் பொழிவார்கள்.
 
மாணவ&மாணவிகளே! எண்ணங்கள் பூர்த்தியாகும். வகுப்பறையில் அமைதி காப்பதுடன், படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். உயர்கல்வியில் வெற்றி பெற்று பெற்றோரை பெருமைப்படுத்துவீர்கள். நீங்கள் விரும்பிய பாடப்பிரிவில், எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்வீர்கள். ஆசிரியரின் அன்பையும், பாராட்டையும் பெறுவீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம்  வெல்வீர்கள்.
 
அரசியல்வாதிகளே! தலைமையுடனான மோதல்கள் குறையும். கட்சியில் மதிப்புக் கூடும். சகாக்கள் உங்களுடைய  ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள்.
 
கலைத்துறையினரே! வெளிநாட்டு நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். யதார்த்தமான படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகும். உங்களுடைய கற்பனைத் திறன் வளரும்.
 
வியாபாரத்தில் ஏற்பட்ட நட்டங்களையும், போட்டிகளையும் சமாளிக்க முடியாமல் திணறினீர்களே! இனி அவற்றையெல்லாம் சரி  செய்து முன்னேறுவீர்கள். பழைய பாக்கிகளெல்லாம் வசூலாகும். வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களை கொள்முதல் செய்து லாபத்தை பெருக்குவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள்  கிடைக்கும். சிலர் புது கிளைகள் தொடங்குவீர்கள். மக்கள் நடமாட்டம் அதிமுள்ள மெயின் ரோட்டிற்கு கடையை மாற்றுவீர்கள். வேலையாட்கள் தங்களது தவறை உணருவார்கள். கல்வித் தகுதியில் சிறந்த நல்ல அனுபவமிக்க வேலையாட்கள்  அமைவார்கள். உங்களை விட்டு விலகிச் சென்ற பழைய பங்குதாரர் மீண்டும் வந்திணைவார். கட்டிட உதிரி பாகங்கள், ஆடை  வடிவமைப்பகம், ஸ்பெக்குலேஷன், துரித உணவகம் வகைகளால் லாபமடைவீர்கள். வியாபாரம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல  தீர்ப்பு வரும். வியாபார சங்கம், தேர்தல் இவற்றில் நல்ல பதவிகள் கிடைக்கும். அரசாங்கத்தால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். 
 
உத்யோகத்தில் அதிகாரிகளின் பலம் எது பலவீனம் எது என்பதை உணர்ந்து அதற்கேற்ப உங்களின் நடவடிக்கைகளை மாற்றிக்  கொள்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். அண்டை மாநிலத்தில், அயல்நாட்டில் வேலை வாய்ப்புகள் வரும். ப்ரமோஷன்காக தேர்வெழுதி காத்திருந்தவர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும்.  சம்பள உயர்வு, மறுக்கப்பட்ட உரிமைகளெல்லாம் தடையின்றி கிடைக்கும்.    
 
கேதுவின் பலன்கள்:
 
இதுவரையில் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் அமர்ந்துக் கொண்டு எந்த வேலைகளையும் முழுமையாக செய்ய விடாமல்  முடக்கிப் போட்டதுடன், உத்யோகத்தில் அடிக்கடி இடமாற்றங்களையும், வீண் பழிகளையும் தந்து உங்களுடைய திறமைக்கு  அங்கீகாரமும் இல்லாமல் செய்த கேது பகவான் இப்போது உங்களது ராசிக்கு 9&ம் வீட்டில் வந்தமர்வதால் தன்னம்பிக்கை  அதிகரிக்கும். வேலைச்சுமை குறையும். தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.  குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்களெல்லாம் விலகும். மனைவிக்கு வேலைக் கிடைக்கும். பணவரவு உண்டு  என்றாலும் அத்தியாவசியச் செலவுகளை மட்டும் செய்யப்பாருங்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வேற்றுமதம், மொழி,  மாற்று இனத்தவர்களால் திடீர் திருப்பங்கள் உண்டாகும். சிறுக சிறுக சேமித்து வைத்ததில் புறநகர் பகுதியிலாவது ஒரு கால்  கிரவுண்டு வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள். திடீரென்று அறிமுகமாகுபவர்களால் ஆதாயமடைவீர்கள். ஆனால்  தந்தையாருக்கு சின்ன சின்ன அறுவை சிகிச்சை, இரத்த கொதிப்பு, சிறுநீரக கல் வந்துப் போகும். பாகப்பிரிவினை, பிதுர்வழி  சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். வழக்கில் தீர்ப்பு சற்று தாமதமாகும். தந்தைவழி உறவினர்களால் செலவுகள் வரக்கூடும். அரசுக் காரியங்கள் இழுபறியாகும். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்மை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்.
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
27.7.2017 முதல் 29.11.2017 வரை உங்களின் சப்தம&விரையாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2&ம் பாதம் மகர ராசியில் கேதுபகவான் செல்வதால் இக்காலக்கட்டங்களில் எதிர்பாராத திடீர் முன்னேற்றம் உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். அலைச்சல் குறையும். சகோதரர் சாதகமாக இருப்பார். சொத்து சேரும். கமிஷன் வகைகளால் ஆதாயமடைவீர்கள். மனைவி  பக்கபலமாக இருப்பார். அவருக்கு வேலைக் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். என்றாலும் மனைவிக்கு முதுகுத் தண்டில் வலி, கர்பப்பை கோளாறு வந்து நீங்கும். 
 
உங்களின் திருதியாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் உங்களின் ரசனை மாறும். ஆளுமைத் திறன் அதிகரிக்கும். புது பதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.  சொந்த&பந்தங்கள் தேடி வருவார்கள். சில நேரங்களில் சளித் தொந்தரவு, கழுத்து வலி வந்து நீங்கும்.   
 
7.08.2018 முதல் 13.2.2019 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4&ம் பாதம் மகர  ராசியில் கேது செல்வதால் பெற்றோரின் உடல் நிலை பாதிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். எதிலும் சிக்கனமாக இருங்கள்.  அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.
 
வியாபாரத்தில் தொலைக் காட்சி, வானொலி விளம்பர யுக்திகளை கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள்,  பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை குறித்த காலக்கட்டங்களில் செலுத்திவிடுவது நல்லது. உத்யோகத்தில் ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். எதிராக  இருந்த அதிகாரி மாற்றலாவார். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்த சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்குவார்கள். திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு கிட்டும். உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து வெளிவருவீர்கள்.
 
இந்த ராகு&கேது மாற்றத்தில் கேதுவால் அவ்வப்போது நீங்கள், சவால்களை சந்தித்தாலும் ராகுவின் அனுகிரகத்தால் வெற்றிக்  கனியை சுவைப்பீர்கள். 
 
பரிகாரம்:
 
திருத்தணிக்கு அருகிலுள்ள சோளிங்கபுரத்தில் மலை மீது அருள்பாலிக்கும் ஸ்ரீஅமிர்தவல்லி நாச்சியார் உடனுறை ஸ்ரீயோகநரசிம்மரையும், ஸ்ரீஆஞ்சநேயரையும் வணங்குங்கள். ஆதரவற்ற பிள்ளைகளின் கல்விக்கு உதவுங்கள்.
 
-கே.பி. வித்யாதரன்
அடுத்த கட்டுரையில்