திருசெந்தூர் முருகன் கோவிலை பற்றிய அரிய தகவல்கள்...!

Webdunia
செந்திலாண்டவன் ஆலயம் (ஓம்) பிரணவத்தை அடிப்படையாகக் கொண்டு, வாஸ்து லட்சணங்களோடு கட்டமைக்கப்பட்டுள்ளது. கோயில் வடக்கு- தெற்காக 300 அடி  நீளமும் கிழக்கு- மேற்காக 214 அடி அகலத்துட னும் அமைந்துள்ளது. இதன் பிரதான வாயில் தெற்கு நோக்கியது.
கோபுரம், யாளி மண்டபத்துக்கு மேல் 137 அடி உயரமும், 90 அடி நீளமும், 65 அடி அகலத்துடனும் திகழ்கிறது. இதன் ஒன்பதாவது மாடத்தில் கடிகார மாளிகை  இருக்கிறது.
 
மேற்கு ராஜ கோபுரம், தெய்வானை திருமணம் நடைபெறும்போது மட்டும் திறக்கப்படும். முதல் பிராகாரத்தில் தெற்கில் ஜெயந்திநாதர் எனப்படும் குமாரவிடங்கப்  பெருமான் வள்ளி- தெய்வானையுடன் காட்சி தருகிறார். தென்மேற்கில் வள்ளிக்கும், வடமேற்கில் தெய்வயானைக்கும் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன.
 
மேற்கில் சங்கரநாராயணர், காசி விசுவநாதர்- விசாலாட்சி, வேதபுரீசுவரர், திருவாதபுரீசுவரர், நாகநாத சோமேசுவரர் ஆகியோரது சந்நிதிகள் உள்ளன. வடக்கில்  மாணிக்கவாசகர், காரைக்காலம்மையார், சிவகாமி- நடராஜர், சனீஸ்வரர், பைரவர் சந்நிதிகள் இடம் பெற்றுள்ளன. தவிர இங்கு ஏழுமலையானுக்கும், சந்தான  கிருஷ்ணனுக்கும் தனிச் சந்நிதிகள் உள்ளன.
 
இரண்டாம் பிராகாரத்தின் மேற்கில் ஸித்தி விநாயகர், சகஸ்ரலிங்கம், ஆன்மநாதர், மனோன் மணி அம்மை, பானுகேசுவரர், சோமசுந்தரர், மீனாட்சியம்மை, திருமூலநாதர், திருக்காளத்தி நாதர் (வாயு லிங்கம்), உமா மகேஸ்வரி, அருணாசலேசுவரர் (தேயு லிங்கம்), உண்ணாமுலையம்மை, ஜம்புகேசுவரர் (அப்பு லிங்கம்),  வன்மீக நாதர் (பிருதிவி லிங்கம்), அருணகிரிநாதர், வல்லப கணபதி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. இதன் தென்பகுதியில், முதல் பிராகாரம் செல்லும் வாசலில்  வீரகேசரியும், வீர மார்த்தாண்டரும் காவல் புரிகின்றனர். இங்கு, நவக்கிரகங்கள் கிடையாது. ஆனால், சனி பகவானுக்குத் தனிச் சந்நிதி உண்டு.
 
இந்தத் தலத்தை வீரபாகு க்ஷேத்ரம் என்றும் அழைப்பார்கள். அர்த்த மண்டபத்தில் வீரபாகு, வீர மகேந்திரர் காவல் தெய்வங்களாக விளங்குகின்றனர். செந்தில்  ஆண்டவனுக்கு பூஜை செய்யும் முன்பு, முதலில் வீரபாகுவுக்கு பூஜை செய்து ‘பிட்டு’ படைத்து வழிபடுகின்றனர்.
 
ஸ்ரீ செந்திலாண்டவர் ஒரு முகம், நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். மூலவருக்கு குமார தந்திர முறையிலும், சண்முகருக்கு, சிவாகம முறையிலும் பூஜைகள் நடைபெறுகின்றன. இங்கு மூலவர் தவக் கோலத்தில் இருப்பதாக ஐதீகம். எனவே அவர் கையில் வேலும் அருகில்  தேவியரும் இல்லை.
 
கருவறையின் பின்புறத்தில் ஐந்து லிங்கங்களும் கருவறைக்குள் மூன்று லிங்கங்களும் உள்ளன. இவற்றை அஷ்ட லிங்கங்கள் என்பர். அஷ்ட லிங்கங்களும் இங்கு  இடம்பெற்றிருக்கக் காரணம், இறைவன் சூரிய- சந்திரராகவும், பஞ்ச பூதங்களாகவும், உயிர்களாகவும் விளங்குகிறார்.
 
முருகன் சந்நிதியில் முருகனுடன் பஞ்ச லிங்கங்களைக் கண்ணாலும், மற்ற லிங்கங்களை மனதாலும் பூஜிக்க வேண்டும். அப்போதுதான் நமது பிரார்த்தனை முற்றுப் பெறும். அஷ்ட லிங்கங்கங்களில், பஞ்ச லிங்கங்களுக்கு பூஜை நடக்காது. ஏனெனில், முருகப்பெருமானே இந்த லிங்கங்களுக்கு பூஜை செய்வதாக ஐதீகம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்