மார்ச் மாத ராசிப் பலன்கள் - தனுசு

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (23:18 IST)
உள்ளன்று வைத்து புறமொன்று பேசாதவர்களே! சூரியன் இந்த மாதம் முழுக்க சாதகமான வீடுகளில் செல்வதால் நீங்கள் பரபரப்பாக காணப்படுவீர்கள். எதிலும் உங்கள் கை ஓங்கும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். பாகப்பிரிவினை நல்லவிதத்தில் முடியும்.

பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டு. குழந்தை பாக்யமும் கிடைக்கும். பிரபலங்களும் அறிமுகமாவார்கள். பெரிய பதவியில் இருக்கும் பால்ய சிநேகிதர்களையும் சந்தித்து மகிழ்வீர்கள். வேலைக் கிடைக்கும். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும். அவர் பாசமாகப் பேசுவார். புதிய பதவிகள், பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

உங்களுடைய ராசிக்கு சாதகமான நட்சத்திரங்களில் சுக்ரனும், புதனும் சென்றுக் கொண்டிருப்பதால் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சிலர் புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். வீடு, மனை விற்பதன் மூலமாக பணம் வரும். அதில் பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வதற்கான வழி வகையும் கிடைக்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். சிலர் பழுதான வாகனத்தை சீர் செய்வீர்கள்.

செவ்வாய் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு வேலைக் கிடைக்கும். மகனுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். ஒருசிலர் அயல்நாட்டிலிருக்கும் பிள்ளைகளை சென்று பார்த்து வருவீர்கள். பூர்வீக சொத்தால் வருமானம் வரும். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

9-ந் தேதி வரை உங்கள் ராசிநாதன் குருபகவான் லாப வீட்டில் நிற்பதால் சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஆனால் 10-ந் தேதி முதல் குரு வக்ரமாகி 10-ல் நுழைவதால் வேலைச்சுமை, சின்ன சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தடுமாற்றங்களெல்லாம் வந்துச் செல்லும்.

கன்னிப் பெண்களே! உங்களுக்கிருந்த அலட்சியப் போக்கு மாறும். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பெற்றோரின் அரவணைப்பு உண்டு. உயர்கல்வியில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்தபடி திருமணம் கூடி வரும். வியாபாரத்தில் அதிரடி முன்னேற்றம் உண்டு. புதியவர்களால் ஆதாயம் உண்டு. கடையை விஸ்தாரமான இடத்திற்கு மாற்ற முயற்சி செய்வீர்கள்.

உத்யோகத்தில் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அரசாங்க பதவியும் சிலருக்கு கிடைக்கும். உங்களுடைய திறமையை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளால் எல்லோராலும் பெருமையாகப் பேசப்படுவீர்கள். நினைத்ததை நிறைவேற்றிக் காட்டும் மாதமிது.
அடுத்த கட்டுரையில்