மகா கணபதி ஹோமம் செய்வதால் உண்டாகும் பலன்கள்...!!

Webdunia
மகாகணபதி ஹோமம் மிகவும் சூட்சுமங்கள் நிறைந்தது. அந்த ஹோம குண்டத்தை யானையின் நான்கு வலிமையான கால்களாக நினைத்துக் கொள்ளுங்கள்.  கால்களை அசைக்காமல் ஸ்திரமாக நின்று கொண்டு யானை உடலையும், தும்பிக்கையையும், தலையையும், காதுகளையும் அசைப்பதாக பாவனை செய்து கொண்டு  அக்னியை பாருங்கள். 

மந்திரங்களோடு சேர்த்து செய்யப்படும் அக்னியின் அசைவுகள் யானை அசைவது போன்றிருக்கும். மகாகணபதி ஹோமத்தின் மையமே உங்களுக்குள் இருக்கும்  மூலாதார சக்தியைத் தூண்டுவதுதான். அசைவற்ற மூலாதாரம் என்கிற கணபதி அசைவிக்கவே இந்த ஹோமம். இல்லையெனில் மனம் தாறுமாறாக அலையும்.  காற்றில் பறக்கும் தூசு போல இலக்கின்றி என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளிக்கும். ஆனால், மூலாதாரம் விழித்துக் கொண்டால் மனம் ஒருமை பெறும். எண்ணங்களில் நேர்த்தியிருக்கும்.

வெறும் சிந்தனையோடு நில்லாமல் செயல் திறனிலும் உடல்  வழியாக உழைக்க வைக்கும். காரணம் மூலாதாரத்தின் பூரணமான சக்தி அதை பிராண சக்தி என்று விதம் விதமாக கூறலாம். அது நம் புத்தி, மனம், உடல் என்று  சகல இடங்களுக்கும் பாயும். செயலில் திறன் கூடினால் வெற்றி எளிதாகும்.
 
ஆகவே, கணபதி ஹோமம் என்பதே வாழ்வின் இக பரலோகத்தின் வெற்றியைக் கொண்டுவரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ஹோமங்களைச் செய்யச்  செய்ய சித்தத்தில் தெளிவையும் நம்மையும் அறியாமல் இறைவனை அடையும் ஒரு தாபத்தையும் அதிகரிக்கச் செய்யும். இல்வாழ்க்கையில் உள்ளபோதே பிரம்ம வஸ்துவை அடையும் விவேகத்தையும் அதிகரிக்கும். ஆத்மா யக்ஞேன கல்பதா என்பது ருத்ர வாக்கியம். யக்ஞேனத்தினால் ஆத்மா அடையப்படுகிறது என்பதே  இதன் பொருள். இப்போது புரிகிறதா கணபதி சகல விஷயங்களிலும் எப்படி கரமருளி காக்கிறார் என்பது.
 
மகாகணபதி ஹோமத்தை வெள்ளிக் கிழமைகளில் சுக்ல பட்ச சதுர்த்தி, ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் செய்தால் விசேஷம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிடித்து வைத்தால் பிள்ளையார் என்பார்கள். அத்தனை எளிமையான தெய்வத்தை சிக்கெனப் பிடித்தால் சீரும் சிறப்போடும் வாழலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்