ஸ்ரீ ராமநவமி அன்று பானகமும் நீர்மோரும் நிவேதனம் செய்வது ஏன்...?

Webdunia
கர்ப்ப உற்சவம்: ராமநவமிக்கு ஒன்பது நாட்களுக்கு முன்னாலேயே இந்த உற்சவம் தொடங்கப்படும். தினமும் ராமர் படத்துக்கு அர்ச்சனை செய்து, ராம நாமத்தை ஜபித்து, விரதமிருந்தும் வழிபடுவார்கள். சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வெண்பொங்கல் போன்ற பிரசாதங்களை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு விநியோகிப்பார்கள்.

ஸ்ரீராமநவமி அன்று பானகமும் நீர்மோரும் கட்டாயம் நிவேதனம் செய்வார்கள். காரணம், கானகத்தில் விஸ்வாமித்திர முனிவரோடு வாழ்ந்த போது அவர்கள் தாகத்துக்கு நீர்மோரும் பானகமும் பருகினார்கள்.
 
அதையொட்டியே இவை நிவேதனம் செய்யப்படுகின்றன. அன்று முழுவதும் ராமநாமத்தை ஜபித்து உபவாசம் இருந்தால் வாழ்க்கையில் சகல சம்பத்துகளோடு வெற்றியும் நிம்மதியும் உண்டாகும் என்பது நிச்சயம்.
 
ஜனன உற்சவம்: இந்த உற்சவம் ஸ்ரீராமநவமி அன்று தொடங்கி பத்து நாட்கள் நடத்தப்படும். பத்தாம் நாள் சீதா கல்யாணமும் பட்டாபிஷேகமும் மிகச் சிறப்பாக நடைபெறும். இந்தப் பத்துநாட்களிலும் பஜனை, ராமாயண பிரவசனம் என கோலாகலமாகக் கொண்டாடுவார்கள் பக்தர்கள்.
 
பானகம் நீர்மோரோடு ஆரம்பிக்கும் நிவேதனம் பத்தாம் நாள் கல்யாண ஆராதனையாக நிறைவு பெறும். மானிடத் திருமணத்துக்குச் செய்வது போலவே பலவகையான பதார்த்தங்கள் செய்து அன்னதானமும் நடைபெறும். இந்தக் கல்யாண விருந்தை உண்டால் மனச்சோர்வு, கவலை ஆகியவை நீங்கும்.
 
ஆரோக்யம் உண்டாகும் என்பர். உற்சவத்தின் கடைசி தினத்தன்று அதிகாலை முதல் பொழுது சாயும் நேரம் வரை பக்தர்கள் ராமநாமத்தை உச்சரித்தபடி இருப்பர்.
 
இதை அகண்ட நாம பஜனை என்று சொல்வார்கள். தீராத கவலை, துக்கம், வறுமை, மனப்பிணி போன்றவை யாவும் அகண்ட நாமத்தில் கலந்துகொண்டு ராமநாமத்தை உச்சரித்தால் சூரியனைக் கண்ட பனிபோல் மறைந்து விடும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்