கார்த்திகையில் தீபம் ஏற்றுவதன் சிறப்புகள் ..!

Webdunia
கார்த்திகை தீபம் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இவ்விழா திருக்கார்த்திகை என்றும் தீபத்திருவிழா என்றும் சிறப்பிக்கப்படுகிறது.
கடும் தவம் மேற்கொண்ட அன்னை பார்வதிதேவி, கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளில்தான் இறைவனது இடப் பாகத்தைப் பெற்றாள். அப்படி, ஈசன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்த தலம் திருவண்ணாமலை என்கிறது அருணாசல புராணம்.
 
மகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் ஜோதிப் பிழம்பாய், சிவபெருமான் காட்சி அளித்த நாளாகக் கருதப்படுகிறது. முருகப் பெருமானை வளர்த்த கார்த்திகைப் பெண்களின் நினைவாகவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
 
மகாபலிச் சக்கரவர்த்தி ஆணவத்தால் உடலில் பெற்ற புண்கள் குணமாக நெய் தீபம் ஏற்றி வந்தார். கார்த்திகை தீபத்தன்று நெய் தீபம்  ஏற்றியபோது மாபலியின் புண்கள் குணமாகின. அது முதல் திருகார்த்திகை அன்று தீபம் ஏற்றும் வழக்கம் ஏற்பட்டதாகவும் கருதப்படுகிறது.
கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதிகாலையில் நீராடி, சிவ-விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா  இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் விளக்குகின்றன.
 
திருக்கார்த்திகை அன்று எல்லா இடங்களிலும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. அன்றைய தினம் விரதமுறை பின்பற்றப்படுகிறது. வழிபாட்டில் பொரி உருண்டை அல்லது கார்த்திகைப் பொரி இடம் பெறுகிறது. அன்றைய தினம் சிவாலயங்களில் சொக்கப்பனை ஏற்றும் வழக்கம் உள்ளது.
 
கார்த்திகை மாதம் தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்ற தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக  தீபம் ஏற்ற வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்