போகிப்பண்டிகை நமக்கு எதை உணர்த்துவதாக அமைந்துள்ளது தெரியுமா...?

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (15:19 IST)
மார்கழியின் கடைசி நாளில் கொண்டாடப்படும் போகி பண்டிகை "பழையன கழிதலும் புதியன புகுதலுமே" என்ற சாராம்சத்தை அடிப்படியாக கொண்டது.


பழைய பொருட்கள் மற்றும் பயனற்றவையை தூக்கி எறியும் நாளாக இது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் வீட்டை தூய்மை செய்து பயன்படுத்தாத அல்லது தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துவது வழக்கம். பழையவற்றை அழித்து போக்கும் இந்த பண்டிகை முன் "போக்கி' என்றே அழைக்கப்பட்டுள்ளது. நாளடைவில் இது மருவி போகி என்றாகிவிட்டது

பண்டைய தமிழர்களின் வழக்கப்படி ஆண்டின் கடைசி நாளான இந்த நாளில், அந்த ஆண்டு முழுவதும் நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்து தவறுகளைத் திருத்திக்கொள்ளவும் நல்லவற்றைத் தொடர்ந்து செய்யவும் உறுதி ஏற்பார்கள். இதுவே ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற கருத்துருவமாகத் தோன்றியது. ‘போக்கி’ எனும் இந்தப் பண்டிகையே குப்பை கூளங்களை நீக்கி வாழ்விடங்களைச் சுத்தமாக்கும் நாளாக மலர்ந்தது. நாளடைவில் ‘போக்கி’ என்பது மருவி “போகி” என்றானது.

‘போகிப் பண்டிகை, தை மாதத்தில் தனது பயணத்தை மாற்றிக்கொள்ள இருக்கும் சூரியனை வரவேற்கும்விதமாகக் கொண்டாடப்பட்ட விழா’ என்று ஆன்மிக நூல்கள் தெரிவிக்கின்றன. பண்டைய காலத்தில் மழையை வரவழைக்கும் தேவர்களின் தலைவன் இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக இந்த விழா இந்திரா விழாவாகக் கொண்டாடப்பட்டது.

போகம் எனும் மகிழ்ச்சிக்கு அடையாளமாக இருந்தவன் இந்திரன். எனவே, இந்த நாள் இந்திரனைப் போற்றும் விழாவாக ‘போகி’ என்றானது. இப்படிப் போகிப்பண்டிகை ஆன்மிக, கலாசார விழாவாக இன்றும் தொடர்ந்துவருகிறது.

போகி என்றால் ‘மகிழ்ச்சியானவன்’, ‘போகங்களை அனுபவிப்பவன்’ என்று பொருள். நல்ல விளைச்சலைக் கண்டு மகிழும் வேளாண்மை மக்கள் பொங்கல் திருவிழாவைக் கொண்டாடத் தயாராகும் தலைவாசல் விழாவே ‘போகிப் பண்டிகை’ எனப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்