திருப்பட்டூர் கோவில் பற்றிய அற்புத தகவல்கள் !!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (18:35 IST)
திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில், சமய புரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும், சிறுகனூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் திருப்பட்டூர் திருத்தலம் உள்ளது. இங்கு பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.

இத்தலத்தில் 3001 வேதம் ஓதுபவர்கள், அனு தினமும் வேதங்களை பாராயணம் செய்ததால் ஏற்பட்ட அதிர்வலைகள் அனைத்து இடங்களிலும் பரவிக் கிடந்ததால் ‘திருப்பிடவூர்’ என்று பெயர் பெற்றது. அதுவே காலப்போக்கில் ‘திருப்பட்டூர்’ ஆனது.
 
புலியின் கால்களைப் பெற்றிருந்தவர் ‘வியாக்ர பாதர்’. இவர் சிவபெருமானை நோக்கி தவம் செய்ய தேர்வு செய்த திருத்தலம் இதுவாகும்.
 
இத்தலத்தில் உள்ள தீர்த்தக் குளத்து நீரை, எவர் ஒருவர் கையில் எடுத்தாலும், அவர்களுக்கு கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.
 
இது காசிக்கு நிகரான தலம் மட்டுமல்ல. திருக்கயிலாயத்திற்கு நிகரான தலமும் ஆகும். இத்தலத்தில் ஸ்ரீமன் நாராயணரை வணங்கி தொழுததால், ஆதிசேஷன் அடுத்த கணம் பதஞ்சலி முனிவராக மாறினார்.
 
திருக்கயிலாய ஞான உலா என்னும் நூல் அரங்கேறிய இந்தத் தலத்தில், கர்வத்தை ஒழிப்பவர்கள் மனதில் இறைவன் உறைவதும், பின் அவர்களே இறைவனாக மாறிப்போவதும் நிகழும் என்பது ஐதீகம்.
 
சிவபெருமான், தன் அடியவர்கள் பலரையும் இந்த தலத்திற்கு அழைத்து வந்து திருவிளையாடலை நிகழ்த்தி இருக்கிறார்.
 
சிவபெருமான், பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எறிந்த தலம் திருவையாறு அருகில் உள்ள திருக்கண்டியூர். அந்த பிரம்மன் பரிகாரம் தேடிக் கொண்டது திருப்பட்டூர் என்ற இந்த திருத்தலத்தில் தான்.
 
பிரம்மன் உருவாக்கிய பிரம்ம தீர்த்தக் குளமும், சிவலிங்கச் சன்னிதிகளும் இங்கு அமைந்துள்ளன. இங்கு வழிபட்டால் 12 சிவாலயங்களுக்கு சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்