2020 ஆம் ஆண்டில் இந்தியா தன்னுடைய வெற்றி இலக்கை அடைய வேண்டுமென்றால், அதன் கிராமப்புற வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு கோவையில் கல்லூரி மாணவ மாணவிகளுடன் கலந்துறையாடிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இந்தியா 2020 என்ற பார்வைக்காக, நாம் சில இலக்குகளை அடைந்திருந்தாலும் அடுத்த 8 ஆண்டுகளுக்கு சில குறிப்பிட்ட துறைகளில், குறிப்பாக கிராமப்புற வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
ஏனென்றால் கிராமங்களே நாட்டின் முதுகெலும்பு என்றும், அதன் வளர்ச்சியே ஒரு நாட்டின் முழுமையான வளர்ச்சிக்கு அடிக்கோலும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் அது சாத்தியமே. இந்தியாவின் வளர்ச்சி இளைஞர்களின் கையில் உள்ளது என்றால் அது மிகையாகாது. அதுவும் இந்தியாவில் உள்ள இளைஞர்களில் 70 சதவீதம் பேர் கிராமப்புறங்களை சார்ந்து வாழ்கின்றனர்.
இந்திய மக்கள் தொகையில் 70 சதவீத மக்கள் கிராமப்புறங்களை சார்ந்து வாழ்வதால் இந்தியாவின் உண்மையான வளர்ச்சி கிராமப்புற வளங்களை மையமாகக்கொண்டு உள்ளது. 2020-இல் இந்தியா வளமான இந்தியாவாக இதுவே முக்கியமான அம்சமாகும்.
கிராமப்புறங்களில் கல்வித்தரத்தை உயர்த்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்க அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தற்போது கொண்டு வரப்பட்டுள்ள நீட் தேர்வின் மூலம் கல்வி தரத்தை உயர்த்த வேண்டிய நிலையில் உள்ளது அரசு. இதனால் கிராமப்புறங்களில் கல்வி வளர்ச்சி இன்னும் மேம்படும். இந்த கல்வியானது சமூக, பொருளாதார வேறுபாட்டை மீறி, பண்பாடு நிறைந்த தரமான கல்வியாக இருக்க வேண்டும்.
கிராமத்துக்கும் நகரத்துக்கும் இடையே உள்ள பொருளாதார இடைவெளியை குறைக்க கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளை அரசு உருவாக்க வேண்டும். கிராமப்புறங்களில் தொழில் தொடங்குவதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். சுத்தமான தண்ணீர், தேவையான எரிசக்தி போன்றவற்றை சமமாக கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
விவசாயம் மற்றும் சேவைத்துறைகள் ஒருங்கிணைந்த முன்னேற்ற பாதையில் மக்களை அழைத்து செல்லும் நாடாக இந்தியா மாற வேண்டும். இப்படி கிராமப்புற வளர்ச்சியில் தான் இந்தியாவின் வளர்ச்சி அடங்கியுள்ளது என்பதை உணர்ந்துள்ள தற்போது உள்ள அரசு கிராமப்புறப் பகுதிகளில் பொருளாதார, சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்தி அப்பகுதிகளை மாற்றுவதற்கான ஷ்யாமா பிரசாத் முகர்ஜி நவீன கிராமங்கள் இயக்கத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ரூ.514208 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இயக்கத்தின் மூலம், பொருளாதார செயல்பாடுகள், திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் மற்றும் கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் செயல்திட்டங்கள் உருவாக்கப்பட்டு நவீன கிராமங்களின் தொகுப்பு உருவாகும். கிராமங்கள் நவீனமயம் ஆகும் போது அதன் பொருளாதார வளர்ச்சியும் நிச்சயம் உயரும். நவீன இந்தியா உருவாவது நவீன கிராமத்தின் கையில் தான் உள்ளது.