முக்தி: ஒருவன் முக்தியைப் பெறுவதற்குரிய முயற்சியில் ஈடுபடும் போது, ஆசை, கோபம், பேராசை, மயக்கம், காமம், குரோதம், லோபம், மோகம் போன்ற பகைவர்களை எதிர்த்துப் போராட வேண்டிவரும்.
இவற்றுள் கோபமே மிகவும் பயங்கரமானது. அதுதான் ஒருவன் முக்திக்காக முயற்சி செய்யும்போது, பல்வேறு தடைகளை ஏற்படுத்தி அவனை முன்னேற விடாமல் தடுக்கிறது.
-ஸ்ரீ ராமர்.
அமைதி: மனதில் அமைதியோடு உணர்வும் உண்டு. நாம் எதிர்நோக்க வேண்டிய நிலை இதுவே. மனதை வெளிக்கிளம்பச் செய்யும் வாசனைகளால் அலைக்கழிக்கப்படாமல் இருக்க, அதனை உள்நோக்கித் திருப்ப வேண்டும். மனம் உள்ளே 'மூழ்குதல்' வேண்டும். ஆனால் உணர்வினைத் தடை செய்யாமல் ஆழ்ந்த அமைதி நிலவுமானால், மனதை மூழ்கடிக்கத் தேவையில்லை.
-ரமணர்.
உயர்வு: கடலைப் பாருங்கள்.. அலையைப் பார்க்காதீர்கள். எறும்பிற்கும், தேவதூதருக்கும் எந்த விதமான வேற்றுமையையும் பார்க்காதீர்கள். ஒவ்வொரு புழுவும், இறைவனின் குழந்தையே. ஒருவன் உயர்ந்தவன், மற்றொருவன் தாழ்ந்தவன் என்று எப்படிச் சொல்லுவது? ஒவ்வொருவனும் தனது நிலையில் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.