வைகாசி விசாகத்தில் அருள் தரும் தீர்த்தகிரி முருகபெருமான்! இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோவிலா?

Raj Kumar
செவ்வாய், 21 மே 2024 (09:55 IST)
முருகன் அவதரித்த திருநாளை கொண்டாடும் விதமாக வருடா வருடம் வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரம் பௌர்ணமி தினத்தில் கூடி வரும் நன்னாளை வைகாசி விசாகம் என்று போற்றி வருகின்றனர் பக்தர்கள். தமிழ்நாட்டில் அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகம் நாளில் சிறப்பு பூஜைகள், விழாக்கள் இருக்கும்.



இருந்தாலும் அவற்றில் சில கோவில்கள் சிறப்பு வாய்ந்தவை. அந்த வகையில் வேலூர் தீர்த்தகிரி மலையில் அமைந்துள்ள தீர்த்தகிரி முருகன் கோவில் பிரசித்திப்பெற்ற முருகன் கோவிலாகும்.

இந்த கோவிலை பலமுறை அழிக்க பார்த்தும் யாராலும் அது முடியவில்லை என வரலாறு கூறுகிறது. பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் சில காலங்களுக்கு பிறகு பாழடைந்து போனது. பிறகு மீண்டும் விஜயநகர காலக்கட்டத்தில் புணரமைக்கப்பட்டது.
18 ஆம் நூற்றாண்டில் திப்பு சுல்தான் காலக்கட்டத்தில் இந்த கோவில் சேதப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் ஆங்கிலேயர்கள் மீண்டும் இந்த கோவிலை புணரமைத்தனர்.

கோவில் தல வரலாறு:

சிவப்பெருமானின் ஆனந்த நடனத்தை பார்த்து இன்பமடைந்த திருமாலின் கண்களில் இருந்து பெருகிய நீரில் இருந்து இரண்டு பெண்கள் உருவாகினர். விஷ்ணுவும் லட்சுமியும் அவர்களுக்கு அமுதவள்ளி சுந்தரவள்ளி என பெயரிட்டு வளர்த்தனர்.

தந்தை திருமால் கொடுத்த யோசனைப்படி இந்த பெண்கள் முருகப்பெருமானை நோக்கி தவம் இருந்தனர். அவர்கள் முன் தோன்றிய முருகன் அவர்களுக்கு ஆசி வழங்கி அம்சவள்ளியை தோவலோகத்திலும், சுந்தர வள்ளியை மண்ணுலகிலும் பிறக்க செய்து திருமணம் செய்துக்கொள்வதாக வரம் கொடுத்தார்.



அந்த வகையில் திருப்பரங்குன்றத்தில் தெய்வானையை திருமணம் செய்த முருகன் வள்ளியை காண வள்ளிமலைக்கு செல்லும் வழியில் இளைப்பாறுவதற்காக தங்கிய இடம்தான் தீர்த்தகிரி மலை. கடவுள் முருகனுக்கே இளைப்பாறுதல் கொடுத்த மலை என்பதால் மன வருத்தத்துடன் வரும் பக்தர்களுக்கும் அமைதியையும் இளைப்பாறுதலையும் வழங்கும் என்பது நம்பிக்கை.

வைகாசி விசாக வழிபாடுகள்:

வைகாசி விசாக நாளன்று இந்த கோவிலில் முருகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடத்தப்படுகின்றன. வருடா வருடம் வைகாசி விசாகத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு காவடி எடுக்கின்றனர். இதனால் அறுபடை வீடுகளில் ஒன்றாக இல்லாதப்போதும் கூட இந்த கோவில் சிறப்பு வாய்ந்த முருகன் கோவிலாக இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்