வாலிபர் ஒருவர் 11 வயது மாணவியை கொலை செய்து புதைத்து விட்டு, தானும் தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள கணபதியேந்தலை சேர்ந்தவர் ஜெயா. இவரது மகள் காளீஸ்வரி [11] மேலநெட்டூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார்.
காளீஸ்வரி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுவிட்டு, மாலை வெகு நேரம் ஆகியும் காளீஸ்வரி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயா பள்ளி சென்று விசாரித்த போது கார்த்திக் என்ற நபர் அழைத்து சென்றது தெரியவந்தது.
இதனிடையே, மாணவியின் அம்மா கார்த்திக்கை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது பதிலளித்த கார்த்திக், ’உன் மகளை கொலை செய்து புதைத்து விட்டேன்’ என கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.
இதனை அடுத்து, மானாமதுரை காவல் நிலையத்திற்கு பெற்றோர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கணபதியேந்தல் கிராமத்திற்கு காவல் துறையினர் விசாரணை நடத்த வந்தபோது கார்த்திக் கழுத்து அறுபட்ட நிலையில் கணபதியேந்தல் கண்மாய் பகுதியில் கிடந்துள்ளார்.
அவரை மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கார்த்திக் தான் கடத்திச் சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கிக் கொன்றது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பின்னர், நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு காளீஸ்வரியின் உடலை புதைத்த இடத்தை கண்டுபிடித்தனர், இது மாவட்ட ஆட்சியர், துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதணைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.