ஆத்தூருக்குப் போகாமல் பசும்பொன் போவதுதான் சமூகநீதியா? –ஸ்டாலினை விளாசிய சமூக ஆர்வலர்கள்

புதன், 31 அக்டோபர் 2018 (12:02 IST)
நேற்று பசும்பொன் முத்துராமலிங்கத்தின் பிறந்த நாளை முன்னிட்டு தேவர் ஜெயந்தி விழா அவரது ஊரான பசும்பொன்னில் நடைபெற்றது. அதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டு தங்கள் மரியாதையை வெளிப்படுத்தினர்.

பசும்பொன் முத்துராமலிங்கத்தின் ஒவ்வொரு பிறந்த நாளின் போது அவரது நினைவைப் போற்றும் விதமாக குருபூஜை நடைபெறுவது வழக்கம். 1978 ஆம் ஆண்டில் இருந்து குருபூஜையை அரசு விழாவாக நடத்த எம்.ஜி.ஆர் அரசு உத்தரவிட்டது. அதன்படி அரசு விழாவான இந்நிகழ்வில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மதியம் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார். விழாவில் வைக்கப்பட்ட சந்தனம் மற்றும் குங்குமத்தை ஏற்றுக்கொண்டார். ஸ்டாலின் இந்த நிகழ்வில் கலந்து கொண்டது சமூக வலைதளங்களில் ஒரு விவாதத்தை உருவாக்கியுள்ளது. குருபூஜை நடக்கும் இதே நேரத்தில்தான் சேலத்தைச் சேர்ந்த தலித் சிறுமி ராஜலட்சுமி ஆதிக்கசாதியைச் சேர்ந்த தினேஷ்குமார் பாலியல் துன்புறுத்தல் கொடுத்து கொலை செய்து தலையைத் தனியாக தூண்டித்த சம்பவம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

பல சமூக அர்வலர்களும் களச்செய்ல்பாட்டாளர்களும் பாதிக்கப்பட்ட ராஜலட்சுமியின் குடும்பத்திற்கு ஆதரவாக களத்தில் நிற்க சமூக நீதியைப் போற்றிப் பாதுகாக்கும் கட்சியாக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் திமுக இதுவரை அந்த படுகொலை குறித்து இதுவரை ஒரு கண்டன அறிக்கைக் கூட வெளியிடவில்லை. ஆனால தங்கள் சித்தாந்தத்தோடு தன் காலம் முழுவதும் முரண்பட்டவரும், தங்கள் கட்சியின் பிதாமகன் பெரியாரைக் கடுமையாகத் தாக்கிப் பேசியவருமான முத்துராமலிங்கத்தின் குருபூஜையில் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியெழுப்பியுள்ளனர்.

தற்போதைய காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தலைவராக சுருக்கப்பட்டுள்ள அவரின் குருபூஞையில் கலந்துகொள்ளாவிட்டால் அந்த சமூக ஓட்டுகளை இழக்க நேரிடும் என்ற அச்சத்தாலா? என்ற சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்