நேற்று பிரதமர் மோடி நெல்லையில் பேசிய போது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை மட்டும் புகழ்ந்த நிலையில் எடப்பாடியாரை ஏன் புகழவில்லை என செல்லூர் ராஜு கேள்வி எழுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த நிலையில் பல்லடம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் என்பதும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் நேற்று நெல்லையில் பிரதமர் மோடி பேசிய போது அதிமுக என்ற கட்சியை ஆரம்பித்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை புகழ்ந்தார் என்பதும் இருவரும் தமிழக நன்மைக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தனர் என்பதும் தமிழக மக்களுக்கு பல திட்டங்களை கொடுத்தார்கள் என்றும் கூறினார்.
ஆனால் அதே நேரத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவை அடுத்து அதிமுகவில் இருந்து முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
இந்த நிலையில் இதுகுறித்து பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புரட்சித்தலைவரையும் அம்மாவையும் பாராட்டி பேசிய பிரதமர் மோடிக்கு நன்றி, ஆனால் எங்கள் பொது செயலாளர் எடப்பாடியாரை அவர் ஏன் பாராட்டவில்லை, ஏனென்றால் தேர்தலில் மனதை வைத்தே பிரதமர் மோடி பேசி உள்ளார் என்று கூறியுள்ளார்