ஏன் எம்.ஜி.ஆரின் பெயரை வைக்கவில்லை? - விஜயகாந்த் கேள்வி

சனி, 7 மே 2016 (11:06 IST)
அம்மா உப்பு, அம்மா உணவகம், அம்மா குடிநீர் என்று பல திட்டங்களுக்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பெயரை வைக்கவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
தேமுதிக – மக்கள் நல கூட்டணி – தமாகா சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நடைபெற்றது. கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
 
அப்போது பேசிய அவர், “ஆட்சியின்போது கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் எப்படியெல்லாம் செலவு செய்கிறார்கள் பாருங்கள். அதிமுக தேர்தல் அறிக்கையில் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கடலூரில் மழை வெள்ளம் வந்தபோது மின்சாரம் இல்லை. தானே புயல் தாக்கியபோது மின்சாரம் இல்லை. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலர் வருவாய் இழந்து தவித்தனர். அப்போது 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அறிவிக்க வேண்டியதுதானே. அப்போது ஏன் அவர் அறிவிக்கவில்லை.
 
குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் இலவச செல்போன் என்று கூறியுள்ளார். இதுபோன்று தேர்தல் அறிக்கையில் இலவசங்களை ஜெயலலிதா அள்ளி விட்டிருக்கிறார். ஜெயலலிதாவின் இலவச அறிவிப்புகள் அனைத்தும், அவரது தோல்வி பயத்தை காட்டுகிறது.
 
தற்போது வீடுகளுக்கு யூனிட்டுக்கு 3 ரூபாயும், கடைகளுக்கு யூனிட்டுக்கு ரூ.7–ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நாளை மின்கட்டணத்தை உயர்த்தினால், மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறோம் என்று அவர்கள் சொல்வார்களா?. சொல்ல மாட்டார்கள்.
 
இந்த சட்டமன்ற தேர்தலில் 6 தலைவர்கள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறோம். ஆறுமுகத்துக்கு என்றுமே ஏறுமுகம்தான். திமுக, அதிமுக கட்சிகளை நீங்கள்தான் அகற்ற வேண்டும்.
 
அம்மா உப்பு, அம்மா உணவகம், அம்மா குடிநீர் என்று பல திட்டங்களுக்கு அம்மா பெயர் வைத்திருக்கிறார்களே. ஏன் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பெயரை வைக்க வேண்டியது தானே. வைக்க மாட்டார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் எம்.ஜி.ஆரின் பெயரை பயன்படுத்தி, ஜெயலலிதா ஆதாயம் பெறுகிறார்.
 
தேவைப்பட்டால் மட்டுமே புரட்சி தலைவரின் புகைப்படத்தையும், அவரது பெயரையும் பயன்படுத்துகிறார். இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மே 16ஆம் தேதி மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்...

வெப்துனியாவைப் படிக்கவும்