சென்னையில் நடந்து வரும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாவட்ட செயலாளர் கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து பல்வேறு திட்டங்களை மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ளார். அதில் “நாம் கைக்காட்டுபவர் பிரதமராக வேண்டும் என்றால் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். அதற்காக மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள் முழு முயற்சியையும் செய்ய வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் சிபாரிசுகளுக்கு இடமில்லை என்றும், எந்த தொகுதியில் யார் வெற்றிபெற அதிகம் வாய்ப்பு உள்ளதோ அவரே வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றும் மு.க.ஸ்டாலின் உறுதியாக தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.