திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்திரவினையும் மீறும் திமுக பேரூர் கழக செயலாளருக்கு யார் அதிகாரம் கொடுத்தது ?

வெள்ளி, 4 மார்ச் 2022 (23:12 IST)
கரூர் மாவட்ட திமுக வின் செயல் – மத சார்பற்ற முற்போக்கு ஜனநாயக கூட்டணியின் தர்மத்தினை மீறியும், கூட்டணியில் விரிசல் ஏற்படும் விதமாக செயல்படுகின்றது ? திமுக தலைமை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்திய கம்யுனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அதிரடி பேட்டி.
 
திமுக தலைமையும், இந்திய கம்யுனிஸ்ட் கட்சி தலைமையும் இணைந்து நகரமைப்பு உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட அளவில், மாநகரம், நகரம் மற்றும் பேரூராட்சி தலைவருக்கான பதவிக்கான கூட்டணி பங்கீட்டினை திமுக தலைமை நேற்று அறிவித்தது. இதில், கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சி தலைவர் பதவியினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கி அதன்படி பேரூராட்சியின் 1 வது வார்டில் போட்டியிட்ட கலாராணி என்பவரை திமுக தலைமையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையும் இணைந்து அறிவித்தது. ஆனால், புலியூர் பேரூர் கழக திமுக செயலாளர் அம்மையப்பன் ஏற்பாட்டின் படி, புவனேஸ்வரி என்ற திமுக பெண் நிர்வாகிக்கு தலைவர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 
 
கரூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் எம்.ரத்தினம் தலைமையில், மாவட்ட துணை செயலாளர்கள் எஸ்.மோகன்குமார், கே.சண்முகம் ஆகியோர் முன்னிலையில் கட்சியின் அவசர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தினை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த., இந்திய கம்யுனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம்.ரத்தினம், எனது பார்வையில் கரூர் வரலாற்றிலேயே கூட்டணி தர்மத்தினை மீறியது திமுக இதுவே முதல் முறை என்றும்,  மதசார்பற்ற முற்போக்கு ஜனநாயக கூட்டணியின் தர்மத்தினை மீறியும், திமுக தலைமையும், அக்கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் கையெழுத்திட்ட ஒரு கூட்டணி தர்மத்தினையே ஒரு சாதாரண அக்கட்சி (திமுக) பேரூர் கழக செயலாளர் மதிக்கவில்லை என்றால் அவருக்கு யார் கொடுத்த தைரியம், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழக மின்சாரத்துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜியின் ஏற்பாட்டின் படி இப்படி நடந்தால் வர இருக்கும் தேர்தல்கள் மற்றும் பாராளுமன்ற தேர்தல் மட்டுமில்லாமல், எம்.எல்.ஏ தேர்தல் ஆகியவற்றில் இது பிரதிபலிக்கும் என்றும் கூறினார். இந்த செயல் மத சார்பற்ற முற்போக்கு ஜனநாயக கூட்டணியின் விரிசலுக்கு ஒரு முன்னுதாரனமாக விளங்கிடாமல், திமுக தலைமை, அந்த தலைமை அறிவிப்பிற்கு மாறாக ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். பேட்டியின் போது, மாவட்ட துணை செயலாளர்கள் எஸ்.மோகன்குமார், கே.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.
 
பேட்டி : எம்.ரத்தினம் - இந்திய கம்யுனிஸ்ட் கட்சி - கரூர் மாவட்ட செயலாளர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்