நாமக்கலில் இன்று பிரச்சாரம் செய்த தவெக தலைவர் விஜய், அங்கு நடைபெற்ற கிட்னி திருட்டை குறிப்பிட்டு பேசியுள்ளார்.
வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மாவட்டம் மாவட்டமாக பிரச்சாரம் செய்து வரும் தவெக தலைவர் விஜய், இன்று நாமக்கல், கரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். காலை 11 மணிக்கே நாமக்கல் வர வேண்டிய விஜய், தொண்டர்கள் கூட்டத்தில் மெதுவாக நகர்ந்தபடி 3 மணியளவில் வந்து சேர்ந்தார்.
பின்னர் மக்களிடையே பிரச்சாரம் செய்த அவர் “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொன்னவர் யார் தெரியுமா? கேப்டன் அண்ணன் விஜயகாந்த் சொல்லியிருக்கலாம். ஆனால் அவருக்கும் நமக்கும் இதை சொன்னவர் நாமக்கல் கவிஞர் அவர்கள்தான்.
இடஒதுக்கீட்டு உரிமையை வழங்கியதில் மிகப்பெரிய பங்குடைய, சென்னை மாகாண முதல்வராக பதவியேற்ற முதல் தமிழர் சுப்பராயன் அவர்களுக்கு மணிமண்டம் கட்டித்தருவதாக வாக்குறுதி அளித்தது யார்? சொன்னார்களே செய்தார்களா? நாமக்கலில் முட்டை சேமிப்புக்கிடங்கு, ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
திமுக எம்.எல்.ஏ மருத்துவமனையில் நடந்த கிட்னி திருட்டால் நாமக்கல்லை சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். விசைத்தறி நெசவாளர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நமது ஆட்சி அமைந்ததும் இதில் ஈடுபட்டவகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். கந்துவட்டி கொடுமையில் இதன் பாதிப்பு இருக்கிறது. அதனால்தான் கிட்னி விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்த தேவையான தீர்வுகளை யோசித்து எங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்வோம்.
திமுகவுக்கு போடும் ஓட்டு பாஜகவுக்கு போடும் ஓட்டுதான். மூச்சுக்கு முந்நூறு முறை அம்மானு சொல்லிட்டு, ஜெயலலிதா மேடம் சொன்னதை எல்லாம் மறந்துட்டு பொருந்தாத கூட்டணி அமைச்சிட்டு, தமிழ்நாட்டு நலனுக்காகனு சொல்றவங்கள மாதிரி நாம இருக்க மாட்டோம்.
2026ல் தவெக - திமுக இடையேதான் போட்டி. நம்பிக்கையோடு இருங்கள்.. இரண்டில் ஒரு கை பார்த்துவிடலாம்” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K