நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கட்ட பிரச்சாரத்திற்கு புறப்பட்ட விஜய்யின் பெரம்பலூர் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது தொண்டர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய விஜய், விக்கிரவாண்டியிலும், மதுரையிலும் வெற்றிக்கரமாக மாநாட்டை நடத்தி முடித்த நிலையில் மக்களை சந்திக்க சனிக்கிழமைதோறும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்ல உள்ளதாக தவெக தலைமை அறிவித்தது. அதன்படி நேற்று விஜய் பிரச்சாரத்தை திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நடத்துவதாக திட்டமிடப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியானதுமே வெளியூர்களில் இருந்தும் ஏராளமான மக்கள் திருச்சியில் கூடியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் காலை 10.30 மணிக்கெல்லாம் திருச்சிக்கு வந்திருக்க வேண்டிய விஜய்யின் வாகனம் மக்கள் அலையில் சிக்கி மெல்ல பிற்பகல் 3 மணிக்கும் மேல் மரக்கடை வந்தடைந்தது. இதனால் திருச்சியில் முடித்துவிட்டு அரியலூரில் விஜய் பிரச்சாரம் செய்ய இரவு 10 மணியாகிவிட்டது. அதன் பின்னர் பெரம்பலூர் செல்ல வேண்டியிருந்த நிலையில், ஏராளமான மக்கள் கூட்டத்தால் விஜய்யின் வாகனம் பெரம்பலூருக்கு ஊர்ந்து சென்றுக் கொண்டிருந்தது. இரவு 1 மணியாகியும் பெரம்பலூர் செல்ல முடியாத நிலையில் அவரது பெரம்பலூர் பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நள்ளிரவு வரை அங்கு காத்திருந்த தொண்டர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.
விஜய்யின் பெரம்பலூர் பிரச்சாரம் ரத்து குறித்து தகவல் வெளியிட்டுள்ள தவெக ராஜ்மோகன் “பெரம்பலூர் நுழைவாயிலில் சுமார் 2 கிலோமீட்டருக்கும் மேல் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில்.. தலைவரின் வாகனம் 1 மணிநேரத்திற்கு மேல் முன்னோக்கி செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இரவு 1 மணியை கடந்த சூழலில் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெரம்பலூர் மக்கள் சந்திப்பு ரத்து செய்யப்படுகிறது. பெரம்பலூர் மக்கள் சந்திப்பின் தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K