திரூவாரூரில் கால் முறிவு ஏற்பட்ட டாஸ்மாக் ஊழியர் ஒருவருக்கு மருத்துவர் வாட்ஸ் ஆப் மூலம் சிகிச்சை அளித்ததால் நோயாளி உயிரழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் ரமேஷ் கடந்த 17-ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து நடந்து கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவர் வழக்கமாக செல்லும் மருத்துவர் அன்சாரியை தொடர்பு கொண்டுள்ளார். மருத்துவர் அன்சாரி தான் வீட்டிற்கு சென்று விட்டதால் வேறொரு தனியார் மருத்துவமனையை பரிந்துரை செய்துள்ளார்.
மருத்துவர் அன்சாரி பரிந்துரைத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரமேஷ்-க்கு எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை போன்றவை எடுக்கப்பட்டு அதனை வாட்ஸ் ஆப் மூலம் மருத்துவர் அன்சாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அன்சாரியின் தொலைப்பேசி அறிவுறுத்தலின் பேரில் ரமேஷ்-க்கு மாவுகட்டு போடப்பட்டது. மேலும் ரமேஷ்-க்கு ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது. மருந்தை அவரது உடல் ஏற்றுக்கொள்ளவில்லை, இதனால் ரமேஷு-க்கு ரத்த அழுத்தம் மற்றும் நாடித் துடிப்பு குறைந்து, வலிப்பு ஏற்பட்டு சிறிது நேரத்தில் இறந்து விட்டார்.
மருத்துவர் வாட்ஸ் ஆப் மூலம் சிகிச்சை அளித்ததால் தான் ரமேஷ் இறந்ததாக அவரது உறவினர்கள் அந்த தனியார் மருத்துவமனையில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் 20-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.