பிரபாகரன் கடிதத்தை 28 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோ வெளியிட்ட ரகசியம் என்ன?

Webdunia
ஞாயிறு, 18 செப்டம்பர் 2016 (17:30 IST)
திமுக தலைவர் கருணாநிதிக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் எழுதிய கடிதத்தை, செப்டம்பர் 15ஆம் தேதி திருச்சியில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டார்.
 

 
1989ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்த கடிதத்தை 28 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோ வெளியிட்டது ஏன்? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இது குறித்து பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்துள்ள விளக்கத்தில், “பிரபாகரன் என்னை அதிகமாகப் புகழ்ந்து எழுதிய கடிதத்தை கருணாநிதி ரசிக்கவில்லை. அந்தக் கடிதத்தில், அவரைப் பற்றி தலைவர் பிரபாகரன் அதிகமாக எழுதியிருப்பார் என்று கலைஞர் நினைத்திருப்பார். ஆனால், அந்தக் கடிதம், என்னைப் பற்றி அதிகமாக புகழ்ந்து எழுதப்பட்டு இருந்தது.
 
கடல் புலிகள் தலைவர் சூசைதான், ’அண்ணா, இதை ஒரு பிரதி எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினார். அதோடு, அவரே பிரதி எடுத்துவந்து என்னிடம் கொடுத்தார். இது யாருக்கும் தெரியாது. நான் இதை யாரிடமும் சொல்லவில்லை. இதை நீண்ட காலமாக பூட்டியே வைத்திருந்தேன்.
 
இந்தக் கடிதம், ஈழ உணர்வாளர்கள் மனதில் ஒரு எழுச்சியை உருவாக்கும் என்று என் மனதில் பட்டது. ஏற்கனவே, 28 வருடங்கள் ஓடிவிட்டது. வாழ்க்கையில் சில நல்லவற்றை வெளி உலகுக்கு காட்டாமல் போவது நல்லதல்ல என யோசித்துத்தான் கடிதத்தை வெளியிட்டேன்” என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்