உங்களுக்குள்ள என்ன பிரச்சினை? தமிழிசையை மேடையில் வைத்து கண்டித்த அமித்ஷா?

Prasanth Karthick

புதன், 12 ஜூன் 2024 (12:13 IST)
தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல் இருப்பதாக பேசிக் கொள்ளப்படும் நிலையில் இன்று சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசை சௌந்தர்ராஜனை மத்திய அமைச்சர் அமித்ஷா மேடையிலேயே வைத்து கண்டித்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை செயல்பட்டு வரும் நிலையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக சார்பில் தற்போதைய பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர்களான எல்.முருகன், தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்டோரும் போட்டியிட்டனர். ஆனாலும் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.

தமிழ்நாட்டில் பாஜக வலுவடைய முடியாததற்கு அண்ணாமலையின் செயல்பாடுகள்தான் காரணம் என கட்சிக்குள்ளேயே சிலர் புகைச்சலை கிளப்பத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் பாஜக முன்னாள் தமிழக தலைவரும், முன்னாள் ஆளுனருமான தமிழிசை சௌந்தர்ராஜன் பேசும்போதும் மறைமுகமாக தமிழக பாஜக குறித்த அதிருப்தியை தெரிவித்திருந்தார்.

ALSO READ: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அடுத்த பட்ஜெட் எப்போது? புதிய தகவல்..!

தமிழக பாஜகவிற்குள் ஏற்பட்டுள்ள இந்த உள்கட்சி பூசல் விவகாரம் தலைமைக்கு தெரிய வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்று ஆந்திராவில் நடந்த சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்ட பல பாஜக தலைவர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது எல்லாருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு சென்ற தமிழிசையை அருகில் அழைத்து பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, கோபமாக கைகளை நீட்டி பேசியது வீடியோவில் பதிவாகியுள்ளது. அவர் தமிழ்நாடு பாஜக உட்கட்சி விவகாரம் குறித்துதான் தமிழிசையை கண்டிக்கிறார் என பலரும் தங்களது யூகங்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருவதால் அமித்ஷா தன்னிடம் என்ன பேசினார் என்பது குறித்து விரைவில் தமிழிசை சௌந்தர்ராஜனே தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்