செவ்வாயன்று, காஷ்மீரில் 3,164 கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது கொரோனாவின் இரண்டாவது அலையில் இதுவரை பதிவானதில் மிக அதிக எண்ணிக்கையாகும்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும் 2,134 தொற்றுகள் பதிவாகியுள்ளன. 25 கொரோனா நோயாளிகள் செவ்வாய்க்கிழமை இறந்துள்ளனர். இறந்தவர்களில் 10 பேர் காஷ்மீருடன் தொடர்புடையவர்கள்.
கடந்த ஒரு மாதத்தில், ஜம்மு-காஷ்மீரில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஸ்ரீநகர் மாவட்டத்தில், கொரோனா பரவுவதைத் தடுக்க நிர்வாகம், செவ்வாய்கிழமை அன்று, 144வது பிரிவின் கீழ் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
காஷ்மீரில் மருத்துவர்களின் அமைப்பான, காஷ்மீர் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் நிசார்-உல்ஹசன், காஷ்மீரில்அதிகரித்துவரும் கொரோனா இறப்புகள்,உண்மையில் மக்கள் மருத்துவமனைக்கு வருவதை தாமதப்படுத்தியதன் விளைவாகும் என்று கூறியுள்ளார்.
" மிகவும் நோய்வாய்ப்படும்போதுதான் அவர்கள் மருத்துவமனைக்கு வருகிறார்கள்," என்று அவர் தெரிவித்தார்.
"காஷ்மீரில் உள்ள மருத்துவமனைகளில் ஐ.சி.யு படுக்கைகளின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு சரியான நேரத்தில் சரியான சிகிச்சை கிடைப்பதில்லை. இதனால் நோயால் ஏற்படும் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன,” என்று டாக்டர் நிசார் விளக்குகிறார்.
கடந்த சில நாட்களாக காஷ்மீரில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் முழுவதும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நேரம் மாலை எட்டு மணி முதல் காலை ஆறு மணிவரை இருப்பினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜம்மு-காஷ்மீரில், நாள் முழுவதும் கொரோனா ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.