சென்னை கனமழையில் அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? - அரசே அளித்த விளக்கம்!

Prasanth Karthick

புதன், 16 அக்டோபர் 2024 (13:41 IST)

சென்னையில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

 

 

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் நேற்று முன் தினம் முதலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. இதனால் நேற்று சென்னையின் பல பகுதிகளில் மழை வெள்ளமாக காட்சியளித்தது. மழைநீர் வடிகால்கள் சில இடங்களில் கை கொடுத்தாலும், சில இடங்களில் குப்பை சேகரமாகி அடைத்துக் கொண்டதால் நீர் செல்ல வழியில்லாமல் போனது.

 

இந்நிலையில் கனமழையில் சென்னையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, சென்னையில் 13.1 செ.மீ அளவு மழை பெய்தும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததால் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்கள் தங்க 300 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டன.

 

சென்னை மாநகராட்சியின் 21 ஆயிரம் களப்பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிகளை மேற்கொண்டனர். நேற்று காலை வரை 7 லட்சம் பேருக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கியதால் மூடப்பட்ட 3 சுரங்கபாதைகளிலும் நீர் வெளியேற்றப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

சாலையில் விழுந்த 67 மரங்கள் அகற்றப்பட்டுள்ளதுடன், 412 இடங்களில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்