சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெ. அனுமதிக்கப்பட்டது முதல் தற்போது வரை அவரின் மரணத்தில் மர்மமே நீடிக்கிறது. அதற்கு முக்கிய காரணம், அவர் மருத்துவமனையில் இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படமோ அல்லது வீடியோவோ இதுவரை வெளியாகவில்லை என்பதுதான்.
அந்நிலையில், ஜெயலலிதாவை நாங்கள் மருத்துவமனையில் பார்க்கவே இல்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்திற்கு பின் இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாகியுள்ளது. அதோடு, மருத்துவமனையில் ஜெ.வை சசிகலா வீடியோ எடுத்தார் எனவும், அந்த வீடியோ எங்களிடமே இருக்கிறது என சமீபத்தில் தினகரன் கூறியிருந்தார். மேலும், அந்த வீடியோவில் ஜெயலலிதா உடல் மெலிந்து, நைட்டியில் இருந்தார். எனவே, கண்ணியம் கருதி அதை வெளியிடவில்லை என அவர் கூறியிருந்தார்.
ஐசியு வார்டில் இருந்து சாதாரண அறைக்கு ஜெயலலிதா மாற்றப்பட்ட பின்புதான் சசிகலா அவரை வீடியோ எடுத்தார். அதுவும், ஜெயலலிதா கூறித்தான் அதை எடுத்தார். அதை ஊடகங்கள் கேட்கிறது என்பதற்காக நாங்கள் வெளியிட முடியாது.
சசிகலா, நான் உட்பட நாங்கள் அனைவருமே ஜெயலலிதாவிற்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர் போலவே இருந்தோம். அவர் ஒரு துணிச்சலான பெண்மணி. ஜெயலலிதா உடனான அந்த நட்பிற்கு களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என சசிகலா நினைத்தார். அதனால்தான் அந்த வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை. தற்போது விசாரணைக் கமிஷன் வைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், அதை அவர்களிடம் அந்த வீடியோவைக் கொடுப்போம்” என அவர் கூறினார்.