'விஜய்யின் உரை பழைய பஞ்சாங்கம்': அண்ணாமலை விமர்சனம்

Siva

வெள்ளி, 22 ஆகஸ்ட் 2025 (15:36 IST)
மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியது, 'பழைய பஞ்சாங்கத்தையே மீண்டும் பேசியுள்ளார்' என்று பா.ஜ.க.வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
 
செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “விஜய் தனது கட்சியை பெரியதாக்குவது மற்றும் கூட்டணிக்கு யாரை கொண்டு வருவது என்பதை பற்றித்தான் சிந்தித்திருக்க வேண்டும். பிற கட்சிகளின் தவறுகளை பற்றி பேசுவதைவிட, தனக்கு மக்கள் மீது நம்பிக்கை இருந்தால், தலைவர்கள் தன்னை நம்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் பேசியிருக்க வேண்டும். ஆனால், அவரது பேச்சில் அந்தத் தன்னம்பிக்கை இல்லை
 
அரசியலில், ஒரு கட்சி மற்றவர்களின் பலவீனத்தை பற்றிப் பேசாமல், தனது பலத்தை பற்றித்தான் பேசும். ஆனால், மதுரை மாநாட்டில் விஜய் தனது பலத்தை பற்றி பேசவில்லை. மக்கள் விஜய்யின் பலம் என்ன, அவர் எவ்வாறு மாற்றாக இருப்பார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அவர் தி.மு.க.வை வீழ்த்துவது பற்றி பேசினார். இதற்காக அவர் வைத்திருக்கும் ஆரோக்கியமான கருத்துக்கள் என்னவென்று பார்த்தால், அது பழைய பஞ்சாங்கமாகவே உள்ளது. மக்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை எதிர்பார்த்திருந்தனர்.
 
விஜய் மக்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை பற்றிப் பேச வேண்டும். மாநாட்டில் கைதட்டல் பெறுவது எளிது. ஆனால், அதை வாக்குகளாக மாற்றுவதற்கு ஒரு வலுவான சித்தாந்தம் தேவை. மக்கள் உள்ளூர் வேட்பாளர், அவர்களால் 5 ஆண்டுகள் தாக்குப்பிடிக்க முடியுமா என்பதைப் பார்த்துத்தான் வாக்களிப்பார்கள்” என்று அண்ணாமலை கூறி, விஜய்க்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்