போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! – அம்பலமான ஆதரவற்றோர் ஆசிரமத்தின் அக்கிரமங்கள்!

வியாழன், 16 பிப்ரவரி 2023 (09:22 IST)
விழுப்புரத்தில் ஆதரவற்றோர் ஆசிரமத்தின் பெயரில் நடத்தப்பட்ட பல்வேறு வன்கொடுமை சம்பவங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் கேரளாவை சேர்ந்த ஜூபின் பேபி என்பவர் அன்பு ஜோதி என்ற பெயரில் ஆசிரமம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் உள்ளிட்ட பலர் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

திருப்பூரை சேர்ந்த ஹனிதீன் என்பவர் கடந்த 2021ம் ஆண்டில் ஜாபருல்லா என்பவரை இந்த ஆசிரமத்தில் சேர்த்துவிட்டு வெளிநாடு சென்றுள்ளார். சமீபத்தில் இந்தியா வந்த அவர் ஜாபருல்லாவை பார்க்க ஆசிரமம் சென்றுள்ளார். ஆனால் அவரை இடப்பற்றாக்குறையால் வேறு ஆசிரமத்திற்கு மாற்றி விட்டதாக கூறியுள்ளனர்.

அவர்கள் சொன்ன பெங்களூரு ஆசிரமத்திற்கு சென்று விசாரித்தபோது அவர் அங்கேயும் இல்லை என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஜூபின் பேபியிடம் கேட்டதற்கு அவர் மழுப்பலாக பேசியுள்ளார். இதனால் இதுகுறித்து ஹனிதீன் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

ALSO READ: மதுரை – திருவனந்தபுரம் ரயில் சேவையில் மாற்றம்! முழு விவரம்!

அதையடுத்து போலீஸார் அந்த ஆசிரமத்தில் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்துள்ளது. ஆசிரமத்தில் சேர்க்கப்படும் ஆதரவற்றவர்கள், மாற்று திறனாளிகளுக்கு மொட்டையடித்து செயினில் கட்டி வைப்பது போன்ற விஷயங்களை அங்கு செய்துள்ளனர்.

மேலும் அவர்களுக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்வது உள்ளிட்ட கொடூர சம்பவங்களும் அங்கு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து ஜூபின் பேபி மற்றும் ஆசிரம ஊழியர்கள் உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஜாபருல்லா உள்ளிட்ட பலர் ஆசிரமத்தில் இல்லாத நிலையில் அவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்