விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ஒரு தனியார் பேருந்து நடத்துநருக்கு, வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டிய நிலையில், தவறுதலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விழுப்புரம் அடுத்த விநாயகபுரத்தை சேர்ந்த 46 வயதான மாரிமுத்து, தனியார் பேருந்து நடத்துநராக பணிபுரிகிறார். கடந்த சில மாதங்களாக இவர் தனது வலது காலில் கடும் வீக்கம் மற்றும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார்.
எனவே அவர் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில், அவரது வலது காலில் இரண்டு இடங்களில் ஜவ்வு கிழிந்திருப்பது தெரியவந்தது.
இதற்கு அறுவை சிகிச்சைதான் தீர்வு என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து, மாரிமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை 8:00 மணிக்கு அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை தொடங்கியது. அறுவை சிகிச்சை முடிந்ததும், நண்பகல் 12:45 மணிக்கு அவர் வார்டுக்கு மாற்றப்பட்டார்.
மயக்கம் தெளிந்து எழுந்த மாரிமுத்து, தனது கால்களை பார்த்தபோது பேரதிர்ச்சியில் உறைந்து போனார். அவருக்கு வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டிய நிலையில், தவறுதலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கட்டு போடப்பட்டிருந்தது.
மாரிமுத்துவும் அவருடைய குடும்பத்தினரும் இந்த அலட்சியத்தை கண்டு ஆவேசமடைந்து, அங்கிருந்த மருத்துவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போதுதான், மருத்துவர்கள் "தவறு நடந்துவிட்டது, வருந்துகிறோம்" , "இடது கால் 18 நாட்களில் குணமாகிவிடும்; நாளை வலது காலில் சரியான அறுவை சிகிச்சை செய்துவிடுகிறோம்" என்றும் உறுதியளித்துள்ளனர்.