தேசியக் கட்சியான காங்கிரஸின் தமிழகக் கமிட்டியின் தலைவராக திருநாவுக்கரசு பதவி வகித்து வந்தார். நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் சூழ்நிலையில் அவரது பதவிப் பறிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக கே.எஸ். அழகிரி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் செயல்தலைவர்களின் பதவிக்கும் புதிய ஆட்களாக எச்.வசந்தகுமார், கே.ஜெயகுமார், எம்.கே.விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இது காங்கிரஸ் வட்டாரத்தில் சர்ச்சைகளை உருவாக்கினாலும் மற்ற அரசியல் கட்சியின் புதிய பொறுப்பாளர்களுக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இப்போது அமெரிக்காவில் இருந்து கே.எஸ்.அழகிரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது செய்திக் குறிப்பில் ’ தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டதற்கும், மேலும் புதியதாக பதவியில் நியமிக்கப்பட்ட மற்ற நிர்வாகிகளுக்கும் தேமுதிக சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். புதியதாக பதவியேற்றவர்கள் தங்கள் இயக்கத்திற்கு பெருமையையும், புகழையும் சேர்த்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்
.