தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் என மட்டும் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளதாகவும், "தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்" என தெரிவிக்கவில்லை என்றும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்த போது, "இந்த புத்தாண்டில் அனைவரின் வாழ்வில் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம் நிலைத்து நிற்க வாழ்த்துகிறேன்" என்று கூறியிருந்தார். ஆனால் தமிழ் புத்தாண்டு தினத்தில் மட்டும், "இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே திமுக உட்பட சில கட்சிகள் தை மாதம் முதல் தேதியை தான் தமிழ் புத்தாண்டு எனக் கூறி வரும் நிலையில், அதே நிலைப்பாட்டைதான் விஜய் எடுத்திருக்கிறார் என்றும், சித்திரை மாதத்தை தமிழ்ப்புத்தாண்டாக அவர் ஏற்கவில்லை என்றும், அதனால் தான் அவர் "தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்" எனக் கூறவில்லை என்றும் விமர்சனம் செய்யப்படுகின்றது.
ஆனால் அதே நேரத்தில், கடந்த பொங்கல் தினத்தில் "தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்" என விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்ததையும் நெட்டிசன்கள் எடுத்துக்காட்டி, எதிர்வினை பதிவிட்டு வருகின்றனர்.