ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது எப்படி? – வீடியோ எடுத்தவர் சொன்ன பகீர் சம்பவம்!

வெள்ளி, 10 டிசம்பர் 2021 (11:36 IST)
குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளான சம்பவம் குறித்து வீடியோ எடுத்தவர் தான் பார்த்தவற்றை விவரித்துள்ளார்.

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியத்தில் அதில் பயணித்த முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று அவர்களது உடல் டெல்லியில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.

இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விபத்து ஏற்படும் முன்னதாக ஹெலிகாப்டர் பறப்பதை சுற்றுலா பயணிகள் சிலர் வீடியோ எடுத்திருந்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

அந்த பயணிகளில் ஒருவரான நாசர் என்பவர் தான் பார்த்த சம்பவங்கள் குறித்து அதில் கூறியுள்ளார். அதில் “மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி சென்றபோது காட்டேரி அருகே ரயில்வே ட்ராக்கில் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது ஹெலிகாப்டர் ஒன்று அருகே பறப்பதை கண்டு குட்டி என்ற நண்பர் அதை வீடியோ எடுத்தார். பனிமூட்டத்தில் மறைந்த அந்த விமானம் ஒரு மரத்தில் மோதும் சத்தம் கேட்டது. பின்னர் வேகமாக மோதி வெடிக்கும் சத்தம் கேட்டது. பின்னர் சில வளைவுகளில் சென்று அது மோதிய பகுதியை பார்க்க முயன்றோம். அப்போது அங்கு சில தீயணைப்பு வாகனங்கள் சென்றன. அவர்களிடம் விசாரித்தபோது ஹெலிகாப்டர் விபத்தானது தெரிய வந்தது. இதுகுறித்து அவர்களிடம் சொன்னதுடன் நாங்கள் எடுத்த வீடியோவையும் அவர்களிடம் கொடுத்தோம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்