நேற்று சிம்பு நடித்த பத்து தல படம் திரையரங்கில் வெளியானது. சென்னை ரோகிணி திரையரங்கில் இந்த படத்தை பார்க்க குறவர் சமூக மக்கள் சிலர் சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுற்றியிருந்த மற்றவர்கள் அவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய நிலையில் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் அவர்களை உள்ளே விடாமல் தடுத்த திரையரங்க ஊழியர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்ட பிரிவில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு திரைத்துறையினர் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள இயக்குனர் வெற்றிமாறன் “நூறு ஆண்டுகளுக்கு முன்பாக தீண்டாமையை உடைத்தெறிந்தது திரையரங்கம். ஆனால் இன்று உழைக்கும் எளிய மக்களை அனுமதிக்காமல் தீண்டாமையை கடைபிடித்தது ஆபத்தான போக்கு. எதிர்ப்பு கிளம்பியதால் அனுமதி அளித்திருந்தாலும், இப்படி ஒரு நிகழ்வு நடந்தது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது” என்று கூறியுள்ளார்.