ரஜினிகாந்த் தான் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்ததிலிருந்து தமிழகத்தில் வெற்றிடம் நிலவிவருவதாக பல பேட்டிகளில் கூறியுள்ளார். அவரின் கருத்தை அதிமுகவினரும் திமுகவினரும் மாறி மாறி விமர்சித்து வந்தனர். மேலும் ரஜினிகாந்த் பாஜகவை மறைமுகமாக ஆதரிக்கிறார் என பலரும் விமர்சனங்களை வைத்து வந்த நிலையில் சமீபத்தில் “:திருவள்ளுவருக்கும் எனக்கும் காவி சாயம் பூச பார்க்கிறார்கள், ஆனால் இருவரும் சிக்க மாட்டோம்” என கூறினார்.
இதனை குறித்து பாஜகவினர் “ரஜினி அவரது கருத்தை கூறியிருக்கிறார்” என கண்டனங்கள் எதுவும் தெரிவிக்காமல் கடந்து சென்றனர். அதன் பின்பு சில மணி நேரங்களிலேயே தான் கூறியது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது என ரஜினிகாந்த் பேட்டியளித்தார். மேலும் அப்பேட்டியிலும் தான் பலமுறை கூறிய கருத்தான “தமிழகத்தில் வெற்றிடம் நிலவுகிறது” எனவும் கூறினார்.
இந்நிலையில் தமிழக பாஜகவின் பொது செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன், “கருணாநிதி, ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, தமிழக அரசியலில் வெற்றிடம் நிலவுகிறது” என கூறியுள்ளார். அதிமுகவுடன் பாஜக தற்போது கூட்டணியில் உள்ள நிலையில் இந்த கருத்தை வானதி சீனிவாசன் கூறியுள்ளது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.