பழிக்குப் பழி! - ஓடும் பேருந்தில் இருவர் வெட்டிக் கொலை

புதன், 13 ஜூலை 2016 (17:16 IST)
திருநெல்வேலியை அடுத்துள்ள வீரவநல்லூர் பேருந்து நிலையத்தில் பேருந்திலிருந்து இறங்க முயற்சித்த இருவர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
 

 
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலை அடுத் துள்ள ஸ்ரீபத்மநல்லூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (46). இவரது தம்பி மாரியப்பன் (44). இவர்கள் இருவரும் கடந்த மாதம் மாரியப்பன் என்பவரை வெட்டிக் கொன்றுள்ளனர்.
 
இந்த வழக்குத் தொடர்பாக சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் செவ்வாயன்று காலை சுப்பிரமணியும், மாரியப்பனும் ஆஜராகி விட்டு தங்களது ஊருக்குச் செல்வதற்காக சேரன்மகாதேவியிலிருந்து வீரவநல்லூருக்கு வந்தனர். நாகர்கோவிலில் இருந்து சேரன் மகாதேவி வழியாக பாபநாசம் சென்ற அரசுப் பேருந்தில் பயணம் செய்தனர்.
 
அந்தப் பேருந்து செவ்வாய் காலை 11.30 மணியளவில் வீரவநல்லூர் பேருந்து நிலையத்திற்கு வந்தது பேருந்தின் பின்பக்க படிக்கட்டு வழியாக சுப்பிரமணியும், மாரியப்பனும் இறங்க முயன்றுள்ளனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த மூன்று பேர் கொண்ட கும்பல் பேருந்தை விட்டு இறங்கிய மாரியப்பனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
 
பேருந்துக்குள் புகுந்து சுப்பிரமணியையும் வெட்டியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். பின்னர், அந்தக் கும்பல் இருசக்கர வாகனத்தில் ஏறிச் சென்றுவிட்டது. பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த மக்கள் கண்முன் நடைபெற்ற கொடூரக் கொலைகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
 
இந்தச் சம்பவம் குறித்து வீரவநல்லூர் காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் பழிக்குப் பழியாக இந்த இரட்டைக் கொலை நடைபெற்றது தெரியவந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்