தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் அவர்கள் சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இதில் முக்கிய அறிவிப்பாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 என்று அறிவிப்பு வெளியானது. தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 என்ற திட்டம் வரும் செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த திட்டம் குறித்து சமூக வலைதளத்தில் ஒருவர் கிண்டல் செய்யும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த வீடியோ பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும், தமிழக அரசின் மீது அவதூறு பரப்பும் வகையில் இருப்பதாகவும் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் இந்த வீடியோ தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் டிவிட்டர் கணக்கு பக்கத்தின் அட்மின் பிரதீப் மீது, பெண்களை அவமானபடுத்துதல், கலகத்தை தூண்டுதல், வதந்தி பரப்புதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.