தவெக மதுரை மாநாடு முன்கூட்டியே நடத்த முடிவு.. காவல்துறை அனுமதி..!

Mahendran

செவ்வாய், 5 ஆகஸ்ட் 2025 (12:23 IST)
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, ஆகஸ்ட் 25-ல் நடைபெறுவதாக முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், காவல்துறையின் வேண்டுகோளை ஏற்று, ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து தவெக சார்பில் காவல்துறையிடம் அதிகாரப்பூர்வ கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
 
தவெக மாநாடு நடைபெற இருந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு அடுத்த சில நாட்களில் விநாயகர் சதுர்த்தி வருகிறது. எனவே விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, பாதுகாப்பு பணிகளில் காவல்துறை தீவிரமாக ஈடுபட வேண்டியிருப்பதால், ஆகஸ்ட் 25-ஆம் தேதி மாநாட்டிற்கு பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல்கள் ஏற்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
இதன் காரணமாக, ஆகஸ்ட் 18 முதல் 22-ஆம் தேதிக்குள் மாநாட்டை நடத்தும்படி காவல்துறையினர் தவெக நிர்வாகிகளிடம் பரிந்துரைத்தனர்.
 
காவல்துறையின் இந்த யோசனையை ஏற்றுக்கொண்ட தவெக, ஆகஸ்ட் 21-ஆம் தேதியை மாநாட்டிற்கான புதிய தேதியாக தேர்ந்தெடுத்து, அதற்கான கடிதத்தை அளித்துள்ளது. மாநாட்டிற்கான இடம் மதுரையில் உள்ள பாரபத்தி சுங்கச்சாவடி அருகே இறுதி செய்யப்பட்டுள்ளது. மாநாட்டின் புதிய தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தவெக தலைவர் விஜய் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்