சர்வதேச மீள்உருவாக்க மருத்துவம் மீதான 'ரீஜென் 2025' மாநாடு தொடக்கம், இரத்த தட்டுகள் செறிவான பிளாஸ்மா சிகிச்சைக்கு இந்தியாவில் முதல் வழிகாட்டுதல்கள் வெளியீடு
● உலகெங்கிலும் இருந்து 500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் இரண்டாவது பதிப்பாக நடைபெறும் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர். மீள்உருவாக்க மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள மிக நவீன முன்னேற்றங்களை முன்னிலைப்படுத்துவது இதன் நோக்கமாகும்.
● புதிதாக வெளியிடப்பட்ட PRP வழிகாட்டுதல்கள், இரத்த தட்டுகள் செறிவான பிளாஸ்மா சிகிச்சையின் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள பயன்பாட்டைத் தரப்படுத்துவதற்கான இந்தியாவின் முதல் கட்டமைப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை, 02 ஆகஸ்ட் 2025: மீள்உருவாக்க (Regenerative) மருத்துவம், எலும்புசார் உயிரியல் சிகிச்சைகள், வலி மேலாண்மை மற்றும் விளையாட்டு காயத்திற்கான மறுவாழ்வு ஆகியவற்றிற்கு இரண்டு நாள் சர்வதேச மாநாடான 'ரீஜென் 2025'-இன் இரண்டாவது பதிப்பு, இன்று சென்னையில் தொடங்கியது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்கின்றனர். எலும்பியல், விளையாட்டு தொடர்பான பாதிப்புகள் மற்றும் சிதைவு நோய்களுக்கு குணமளிப்பதற்கு செறிவூட்டப்பட்ட இரத்தத்தட்டுகளுடன் கூடிய பிளாஸ்மா (PRP) சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. இரத்த தட்டுகள் (பிளேட்லெட்கள்) செறிவூட்டப்பட்ட பிளாஸ்மா சிகிச்சைக்கான (PRP) வழிகாட்டுதல்கள் இம்மாநாட்டில் வெளியிடப்பட்டது. பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறவாறு தரப்படுத்தப்பட்ட, சான்றுகள் அடிப்படையிலான கட்டமைப்பாக இந்த வழிகாட்டல்கள் இருக்கின்றன. இந்தியாவில் இத்தகைய வழிகாட்டல் கட்டமைப்பு வெளியிடப்படுவது இதுவே முதன் முறையாகும்.
மீள்உருவாக்க மருத்துவம் என்பது, உடலின் இயற்கையான குணப்படுத்தும் செயல்முறைகளைப் பயன்படுத்தி சேதமடைந்த செல்கள், திசுக்கள் அல்லது உறுப்புகளை சரிசெய்தல், மீள்உருவாக்கம் செய்தல் அல்லது மாற்றுவதில் கவனம் செலுத்தும் ஒரு மருத்துவத் துறையாகும். PRP சிகிச்சையானது, காயமடைந்த திசுக்கள் விரைவாகக் குணமடைவதை ஊக்குவிக்க, நோயாளியின் சொந்த இரத்தத்தில் உள்ள இரத்த தட்டுகளின் செறிவூட்டப்பட்ட அளவைப் பயன்படுத்துகிறது.
இந்த மாநாட்டில் மீள்உருவாக்க மருத்துவத் துறையில் உலகளாவிய சாதனையாளர்கள் உட்பட 60-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் மற்றும் விவாத அமர்வில் பங்கேற்கும் நிபுணர்கள் பங்கேற்றனர். மேலும், மீள்உருவாக்க மருத்துவத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் விரிவான மற்றும் கலந்துரையாடல் அடிப்படையிலான 25-க்கும் மேற்பட்ட அமர்வுகள் இம்மாநாட்டில் இடம்பெற்றன. எலும்பியல், நரம்பியல் மற்றும் தசைக்கூட்டுக்கான சிகிச்சை செயல்முறைகளில் சேதமடைந்த செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளை சரிசெய்ய அல்லது மாற்றுவதற்கு உடலின் இயற்கையான குணப்படுத்தும் திறன்களைப் பயன்படுத்துவதில் மீள்உருவாக்க மருத்துவம் கவனம் செலுத்துகிறது.
ரீஜென் 2025 மாநாட்டின் ஒரு பகுதியாக, நேற்று சென்னை மாநகரில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஒரு நாள் நேரடிப் பயிற்சிப் பயிலரங்கு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்பாளர்களுக்கு இமேஜிங் வழிகாட்டுதலுடன்கூடிய PRP செயல்முறைகள், தனிப்பட்ட மருத்துவ நேர்வுகள் அடிப்படையிலான விவாதங்கள் மற்றும் மீள்உருவாக்க சிகிச்சையில் சிறந்த நடைமுறைகளின் நேரடி செயல்விளக்கங்கள் ஆகியவற்றில் நேரடி அனுபவம் வழங்கப்பட்டது.
மாநாட்டின் தொடக்க அமர்வில், ஆர்த்தோபயாலஜிக்ஸ் கிளினிக்கின் நிறுவனர் இயக்குநரும், எலும்பியல் அறுவை சிகிச்சை மற்றும் மீள்உருவாக்க மருத்துவ நிபுணரும், மற்றும் ரீஜென் 2025 மாநாட்டின் தலைவருமான டாக்டர் ஷர்மிளா துல்புலே தனது உரையில், "இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து மீள்உருவாக்க மருத்துவத் துறையின் தலைசிறந்த நிபுணர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கிய நிகழ்வான ரீஜென் 2025 மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்துவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். மீள்உருவாக்க மருத்துவம் சுகாதாரப் பாதுகாப்பில் மிகவும் நம்பிக்கையளிக்கும் துறைகளில் ஒன்றாக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இதுபோன்ற மாநாடுகள் ஆராய்ச்சி, மருத்துவப் பயன்பாடு மற்றும் கொள்கை ஒருங்கிணைப்பை விரைவுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரீஜென் 2025, அறிவுப் பரிமாற்றம், நேரடிப் பயிற்சி மற்றும் உலகளாவிய ஒத்துழைப்புக்கான ஒரு ஆற்றல்மிக்க தளமாக தன்னை ஏற்கனவே நிரூபித்துள்ளது. மரபணு திருத்தம் மற்றும் திசு பொறியியல் குறித்த முக்கிய உரைகள் முதல் நேரடிப் பயிலரங்குகள், ஆராய்ச்சி அமர்வுகள் மற்றும் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளுக்கான கண்காட்சி வரை, ரீஜென் 2025 மாநாடானது, இந்தியாவில் உயிரியல் சார்ந்த சிகிச்சை முறைகளில் செழுமையான எதிர்காலத்தை வடிவமைப்பதற்கென்றே நடத்தப்படுகிறது. இம்மாநாட்டில் இந்தியாவின் முதல் PRP வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டது இத்துறையின் வளர்ச்சி பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்" என்றார்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் மயக்கவியல் மற்றும் வலி மருத்துவத் துறையின் தலைவரும், பேராசிரியருமான டாக்டர் ஜி.கே. குமார் தனது கருத்துரையில், "இந்தியாவின் முதல் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட PRP வழிகாட்டுதல்களின் வெளியீடு, நாட்டில் மீள்உருவாக்க மருத்துவத்தில் ஒரு திருப்புமுனை நிகழ்வாகும். PRP சிகிச்சை, உலகளவில் உயிரியல் சிகிச்சையின் ஒரு ஆதாரமாக உருவெடுத்திருந்தாலும், இந்தியாவில் இதற்கான தரப்படுத்தப்பட்ட நெறிமுறைகள் உருவாக்கப்படாமல் இருந்தன. இது சீரற்ற நடைமுறைகள் மற்றும் விளைவுகளுக்கு வழிவகுத்தது. இருப்பினும், புதிதாக வெளியிடப்பட்ட இந்த வழிகாட்டுதல்கள் ஒரு விரிவான, சான்றுகள் அடிப்படையிலான கட்டமைப்பை வழங்குவதன் மூலம் அந்த முக்கியமான இடைவெளியை நிரப்புகின்றன. நோயாளியை மையப்படுத்திய சிகிச்சைப் பராமரிப்பில் வலுவான கவனம் செலுத்தும் இந்த வழிகாட்டுதல்கள் தகவலறிந்து வழங்கும் ஒப்புதல் மற்றும் நீண்ட காலப் பின்தொடர் கண்காணிப்பு ஆகியவற்றை வலியுறுத்துகின்றன. 17 முன்னணி நிபுணர்களால் கவனமாக உருவாக்கப்பட்டு, சக-மதிப்பாய்வு மூலம் சரிபார்த்து உறுதி செய்யப்பட்ட இந்த முக்கிய ஆவணம், இந்தியாவின் மீள்உருவாக்க நடைமுறைகளில் மிக உயர்ந்த உலகத் தரங்களுடன் மருத்துவ சிகிச்சை நேர்த்தியில் ஒரு புதிய தர அளவுகோலை அமைக்கிறது" என்றார்.
ஆர்த்தோபயாலஜிக்ஸ் பயோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிறுவனரும் இயக்குநருமான திரு. நிதின் துல்புலே பேசுகையில், "அதிநவீன மீள்உருவாக்க செயல்முறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டன. குணப்படுத்துதலைத் தூண்டுவதற்காக நோயாளியின் சொந்த இரத்தத்திலிருந்து பெறப்படும் தன்னியக்க இரத்தப் பொருட்கள்; திசுக்களின் பழுது நீக்கலுக்கு அல்லது மீள்உருவாக்கத்திற்கு தானமளிப்பவரின் செல்களைப் பயன்படுத்தும் மாற்று செல் சிகிச்சை, திசு மீள்உருவாக்கத்திற்கு ஊக்கமளிக்க உயிரியக்க புரதங்களின் பயன்பாடுகளான வளர்ச்சி காரணி சிகிச்சைகள்; மற்றும் தசைக்கூட்டு மற்றும் குருத்தெலும்பு பழுதுநீக்கலில் பயன்படுத்தப்படும் ஸ்டெம்செல்கள் ஆகிய தலைப்புகள் மீது விவாதங்களும், உரைகளும் இம்மாநாட்டில் இடம்பெற்றன. நாள்பட்ட வலி, விளையாட்டு காயங்கள் மற்றும் சிதைவு நோய்களுக்கு குறைந்தபட்ச ஊடுருவலுடன் கூடிய, தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை வழங்குவதன் மூலம் மருத்துவ நெறிமுறைகளை இத்தொழில்நுட்பங்கள் வேகமாக மறுவடிவமைப்பு செய்து வருகின்றன; பாதிப்புகளிலிருந்து குணமடையும் கால அளவைக் குறைத்து நீண்ட கால அடிப்படையில் சிகிச்சை விளைவுகளை மேம்படுத்துகின்றன" என்றார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் முதுநிலை ஆலோசகரும் மற்றும் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் A. நவலாதிசங்கர் தனது உரையில், "ரீஜென் 2025-மாநாட்டில், இந்த PRP வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டது ஒரு அறிவியல் சாதனை மட்டுமல்ல; இது இந்தியாவின் முழு மீள்உருவாக்க மருத்துவச் சூழல் அமைப்பிற்கும் உத்வேகமளிக்கும் ஒருங்கிணைப்பு செயல்பாடாக இருக்கிறது. நமது பரந்த மருத்துவ நிபுணத்துவம் மற்றும் வளர்ந்து வரும் நோயாளிகளின் அடித்தளத்துடன், உலகளாவிய மீள்உருவாக்க இயக்கத்தில் முன்னிலை வகிப்பதற்கு ஏற்ற திறன்களுடன் ஒரு தனித்துவமான நிலையில் நம் இந்தியா உள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் பாதுகாப்பான, தரப்படுத்தப்பட்ட மற்றும் சான்றுகள் அடிப்படையிலான சிகிச்சைக்கான அடித்தளத்தை உருவாக்குகின்றன. குணப்படுத்துதல் மற்றும் நோயாளிகளுக்கான சிகிச்சைப் பராமரிப்பை நாம் அணுகும்விதம் ஆகியவற்றில் இத்தருணத்தை ஒரு திருப்புமுனையாக ஏற்றுக்கொள்ளுமாறு மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை நாங்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.