தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில் மகளிர் தினம் கோலாகலம்
வியாழன், 9 மார்ச் 2023 (22:53 IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தில் சர்வதேச மகளிர் தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தொடர்ந்து தனது சமுதாய வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வி,மருத்துவம்,சுகாதாரம், பெண்களின் வாழ்வாதார முன்னேற்றம் என தனது சமுதாய வளர்ச்சிப் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது.
பல்வேறு பெண்களுக்கு தொழில் பயிற்சிகள் அளித்து அதன் மூலம் அவர்களை தொழில் முனைவராக உருவாக்கி வரும் ஸ்டெர்லைட் நிறுவனம் ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தின விழாவை கொண்டாடி வருகிறது.
இந்தாண்டு மகளிர் தின விழா ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட இந்த மகளீர் தினவிழா ஸ்டெர்லைட் முதன்மை இயக்க அலுவலர் திருமதி. சுமதி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சமுதாய வளர்ச்சி பிரிவு தலைவர் சுந்தர்ராஜ் வரவேற்புரையாற்றினார். மனித வள மேம்பாட்டு பிரிவு உதவி தலைவர் சக்திவேல், தகவல் தொடர்பு பிரிவு தலைவர் திருமதி. மீரா ஹரிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தெற்கு வீரபாண்டியபுரம் பஞ்சாயத்து தலைவர் மாரியம்மாள் சுப்பையா, சாமி நத்தம் பஞ்சாயத்து தலைவர் முத்து மகாலட்சுமி நல்லதம்பி, மருத்துவர் பூங்கோதை, செயின்ட் அன்ட்ஸ் கல்லூரி பேராசிரியை சகோதரி.செல்வி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் தூத்துக்குடி சிப்காட் பகுதியில் அமையவிருக்கும் பர்னிச்சர் பார்க்கில் பெண் தொழில் முனைவோருக்கு பணி ஒதுக்கீடுகளும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்., முறை சாரா தொழிலில் உள்ள பெண்களுக்காக தனி வாரியம் அமைக்கப்பட வேண்டும்., பஞ்சாயத்து செயலர் பதிவுகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும், அரசு சார்ந்த ஒப்பந்த பணிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும்., பெண்களின் முன்னேற்றத்தில் தங்களுடைய பங்கினை முன்னிறுத்தி செயல்படுத்தி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் போன்ற தீர்மானங்களை பெண்கள் ஒருமித்த குரலில் எடுத்து கொண்டனர்.
ஸ்டெர்லைட் நிறுவனம் செயல்படுத்தி வரும் மகளிர் மேம்பாட்டு திட்டத்தை சிறப்பாக சமூகத்தில் செயல்படுத்தி வரும் துளசி சோசியல் டிரஸ்ட் இயக்குனர் தனலட்சுமி, பெல் சோசியல் வெல்பர் ட்ரஸ்ட் பியூலா ,தாயகம் வெல்பர் டிரஸ்ட் ஜெயக்கனி , டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் டிரஸ்ட் தாமோதரன், ஏபுள் பவுண்டேஷன் சுபர்லா, சென்ட் ஆன்ஸ் கல்லூரி விரிவுரையாளர் அருட்சகோதரி செல்வி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
ஸ்டெர்லைட் முதன்மை இயக்க அலுவலர் திருமதி. சுமதி தலைமை உரை ஆற்றும் போது.. இந்த ஆண்டு ஐநா சபை உலக மகளிருக்காக அனைவருக்குமான டிஜிட்டல் கருத்தாக வெளியிட்டுள்ளது தொழில் நுட்பங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அவர்.
தொழில்நுட்ப மேம்பாடுகளை பயன்படுத்தி பெண்களை மேலும் முன்னேற்றம் அடைவதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ஆணுக்கு பெண் சமமாக மதிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல பெண்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது கருத்துரு என்று கூறினார். ஸ்டெர்லைட் ஆலை திறக்க இத்தனை மகளீர்கள் ஆதரவாக குரல் கொடுப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .இந்த ஆலை மீண்டும் திறக்கப்பட்டவுடன் உலகத்தரம் வாய்ந்த படிப்பினை அளிக்கக்கூடிய வகையில் நல்ல பள்ளி க்கூடம் தொடங்கப்படும். உலகத்தரமாய்ந்த மருத்துவமனை அமைத்து ஏழை எளியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். பெண்களின் மேம்பாட்டுக்காக செயல்படுத்தக்கூடிய அனைத்து திட்டங்களையும் ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்து செயல்படுத்தும் என்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மருத்துவர் பூங்கொடி பேசுகையில்...
விஞ்ஞான முன்னேற்றங்களை பெண்கள் எப்படி பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம். பெண்களுக்கு பொன்னகையை விட புன்னகையை விட புன்னகை முக்கியம். பெண்கள் நல்லதே பேசி பழக வேண்டும். பெண்கள் உடல் நலனை காத்துக் கொள்ள வேண்டும் ஆண்டுதோறும் உடல் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கூறினார்.
விழாவில் மீனவப்பகுதி மற்றும் கிராம பகுதி பெண்கள் நடத்திய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.விழா இறுதியில் ஸ்டெர்லைட் ஸ்மல்டர் பிரிவு தலைவர் மாரியப்பன் நன்றியுரை கூறினார். முன்னதாக வந்திருந்த பெண்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த கையெழுத்து பலகையில் கையெழுத்திட்டனர்.