லலித் மோடி மீது சட்டவிரோத ஏல முறைகேடுகள், பணமோசடி, மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை மீறியது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அதேபோல், விஜய் மல்லையா ₹9,000 கோடிக்கும் மேல் வங்கிக் கடன் தவணையை செலுத்தாத வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இருவரும் 2010 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த நிலையில் லண்டனில் உள்ள தனது வீட்டில் நடந்த பிரம்மாண்டமான விருந்து குறித்த வீடியோவை லலித் மோடி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த விருந்தில் இந்தியப் பாடகர் கார்ல்டன் பிரகன்சா மற்றும் முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல், விஜய் மல்லையா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த விருந்தில் லலித் மோடியும் விஜய் மல்லையாவும் இணைந்து, ஃபிராங்க் சினாட்ராவின் புகழ்பெற்ற பாடலான ஐ டிட் இட் மை வே என்பதை கரோகேயில் பாடி அசத்தினர். இந்த வீடியோ இணையத்தை அதிர வைக்கும் என்று தனக்கே தெரியும் என்றும், "அதுதான் நான் சிறப்பாக செய்யும் வேலை" என்றும் லலித் மோடி சற்றே சவாலான தொனியில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவின் பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்த இரு சர்ச்சைக்குரிய நபர்களும் பொதுவெளியில் ஒன்றாக தோன்றி பாட்டுப் பாடி மகிழ்ந்தது, "இந்தியப் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு பார்ட்டியா?" எனச் சமூக வலைத்தளங்களில் பரவலான விமர்சனங்களை பெற்று வருகிறது.