எடப்பாடிதான் தம்பிதுரையை இயக்கும் சாவியா ? –டிடிவியால் புது சர்ச்சை !

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2019 (07:57 IST)
அதிமுக வுக்கும் பாஜக வுக்கும் இடையில் நல்லுறவு இருந்து வேளையில் அக்கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் தம்பிதுரை பாஜக வைக் கடுமையாக விமர்சித்து வருவது சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. தினகரன் தலைமையிலான அமமுக எடப்பாடித் தலைமையிலான அதிமுக என எலியும் பூனையுமாக மோதிக் கொண்டு வருகின்றன. எடப்பாடித் தலைமையிலான அதிமுக என்பது பெயரளவில் மட்டுமே இருக்கிறது. மற்றபடி அதிமுக வை ஆட்டிப்படைப்பது பாஜக தான்.

ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவருக்கும் இடையில் சமாதானப் படுத்துவதற்காக உள் நுழைந்த பாஜக, தமிழகத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதியில் கூட வெற்றி பெறாமல் ஆட்சி நடத்தி வருவதாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது..

இந்நிலையில் சமீபகாலமாக அதிமுக அமைச்சர்கள் சிலர் பாஜக வைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிலும் எம்.பி.யும் மக்களவைத் துணை சபாநாயகருமான தம்பிதுரைத் தொடர்ந்து பாஜக வைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜக அரசின் பொருளாதார ரீதியான 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சட்டசபையில் பேசிய வெகுசில எம்.பி.களில் தம்பிதுரையும் ஒருவர். அதைத் தொடர்ந்து அதிமுக பாஜக கூட்டணிக் குறித்த கேள்விக்கு ‘பாஜக வைத் தூக்கி சுமக்க நாங்கள் (அதிமுக) என்ன பாவம் செய்தோம்’ எனக் கேள்வியெழுப்பினார்.

அதிமுக தலைமை பாஜகவோடு இணக்கமாக இருக்கும்போது தம்பிதுரையின் இந்த பேச்சு சர்ச்சைகளைக் கிளப்பியது. இது தொடர்பாக விளக்கமளித்த துணை முதல்வர் ஓ.பி,எஸ் கூட ’இது அவருடைய சொந்தக் கருத்து, கட்சியின் கருத்து அல்ல’ என மழுப்பினார். ஈபிஎஸ் இது குறித்து எதுவும் கூறாமல் மௌனமாக இருந்து வருகிறார்.

ஆனால் தம்பிதுரையின் இத்தகையப் பேச்சிற்கு எடப்பாடிதான் காரணம் என்றும், பாஜக கூட்டணியை விரும்பாத எடப்பாடி நேரடியாகப் பேசாமல் தம்பிதுரையைத் தூண்டி விட்டு இப்படிப் பேச வைப்பதாகவும் தினகரன் நேற்றுக் கூறியுள்ளார். இந்த கருத்து அதிமுக வட்டாரத்திலும் தமிழக அரசியலிலும் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்