சேலம் – சென்னை 8 வழிச்சாலை தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது என டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, சேலம் – சென்னை 8 வழிச்சாலை தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று ஒற்றைக்காலில் நிற்கும் முதலமைச்சர் பழனிசாமிக்கும்...
சட்டப்பேரவையிலேயே 8 வழிச்சாலையை எதிர்க்கவில்லை என்று பேசிய எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் வேண்டுமானால் இத்தீர்ப்பு மகிழ்ச்சி தரலாம். ஆனால், மக்களின் உணர்வுகளுக்கும், கண்ணீருக்கும் நீதி கிடைக்காமல் போயிருப்பது வேதனை அளிக்கிறது.
இத்தனைக்கும் பிறகு துளியாவது மனச்சாட்சி இருந்தால், 8 வழிச்சாலைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு பழனிசாமி அரசு முனையக் கூடாது. மக்களின் உணர்வுகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு 8 வழிச்சாலை போடுவதற்கு நினைத்தால் மக்கள் மன்றத்தில் அதற்குரிய தீர்ப்பு கிடைத்தே தீரும் என குறிப்பிட்டுள்ளார்.