வெறுமனே வசனம் பேசினால் மட்டும் போதாது... அரசை சாடிய டிடிவி!

வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (17:35 IST)
விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 ஒப்பந்த தொழிலாளர்கள் குறித்து டிடிவி தினகரன் தனது கண்டனத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

 
மதுரை நேதாஜி நகரில் கழிவுநீர் தொட்டிக்குள் மோட்டார் பழுது பார்க்க போது விஷ வாயு தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில் மதுரையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம், ஒப்பந்த நிறுவனம் சார்பில் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர். முதற்கட்டமாக தலா ரூ.5 லட்சத்திற்கான காசோலைகளை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வழங்கினார்.
 
இந்த சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் எத்தனை நாட்கள் கழிவுநீர் தொட்டியை மனிதர்களால் சுத்தப்படுத்த போகிறோம். சுத்திகரிப்பு இயந்திரங்களை வாங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என கோரியுள்ளனர். 
இதனைத்தொடர்ந்து தற்போது டிடிவி தினகரன் தனது கண்டனத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, மதுரை மாநகராட்சியின் கழிவு நீர் வெளியேற்றும் தொட்டியில் இறங்கிய தொழிலாளர்கள் 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்திருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. 
 
உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தொழிலாளர்கள் இந்தத் தொட்டிக்குள் இறக்கிவிடப்பட்டதாக எழுந்திருக்கும் புகார் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும். பலியான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். 
 
இன்னும் எத்தனைக் காலத்திற்குத்தான் இந்த அவலநிலை தொடருமோ? கழிவுகளைக் கையாள்வதில் மனிதர்களை ஈடுபடுத்தமாட்டோம் என்று வெறுமனே வசனம் பேசினால் மட்டும் போதாது. விஞ்ஞானத்தின் துணைகொண்டு அதனை உடனடியாக செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்