ஆகஸ்டு 14ம் தேதி முதல் சுற்றுப்பயணம் - தினகரன் அதிரடி

வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (18:50 IST)
அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வருகிற 14ம் தேதி தனது சுற்றுப்பயணத்தை தொடங்கவுள்ளார்.


 


சில மாதங்களுக்கு முன்னர் கட்சியின் நலன் கருதி டிடிவி தினகரனை அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அதிமுக அமைச்சர்கள் கூறினர். தினகரனும் ஒதுங்கிக்கொண்டார். ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்த தினகரன் மீண்டும் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட உள்ளதாக கூறினார். ஆனால் அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து பெங்களூர் சென்று சசிகலாவிடம் ஆலோசனை பெற்றார். 
 
அதன் பின்னர் பெங்களூரில் இருந்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் தான் 60 நாட்கள் பொறுமையாக இருக்கப்போவதாகவும் அதற்குள் அதிமுக அணிகள் ஒன்று சேரவில்லையென்றால் தான் மீண்டும் கட்சியை தனது கட்டுப்பாட்டில் எடுக்க உள்ளதாக கூறினார். 
 
இந்நிலையில் அவர் விதித்த அந்த 60 நாட்கள் கெடு இன்றுடன் முடிகிறது. இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர் பேசிய தினகரன் ஆகஸ்ட் 5-ஆம் தேதி அதாவது நாளை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்து ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக கூறினார். அதேபோல், அலுவலகத்திற்கு தான் வருவதை யாரும் தடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார். இது அதிமுகவின் எடப்பாடி அணிக்கு சிக்கலை அளித்தது. 
 
இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் தினகரன் நுழைந்தால் அவரை கைது செய்யவோ அல்லது அவரது நுழைவை தடுக்கவோ வேண்டும் என எடப்பாடி அணியில் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பேசிய தினகரன் ஆகஸ்ட் 4 அதாவது கெடு முடியும் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என கூறினார். மேலும், மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பேசுவேன் எனவும் அவர் கூறியிருந்தார்.
 
இந்நிலையில், வருகிற ஆகஸ்டு 14ம் தேதி, அவர் மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து தனது சுற்றுபயணத்தை தொடங்க இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. வட சென்னை, தஞ்சை, கரூர், சிவகங்கை, நெல்லை, திருச்சி என பல மாவட்டங்களுக்கும் அவர் தொடர்ச்சியாக செல்ல இருக்கிறார் என்பதும், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்டம் ரீதியாக பொதுக்கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால், அதிமுக தலைமை கழகத்திற்கு அவர் நாளை வருவாரா இல்லையா? எப்போது வந்து கட்சி பணிகளை தொடங்குவார் என்பது பற்றி எந்த அறிவிப்பும் இன்னும் வெளியிடப்படவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்