அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது, திடீரென மாணவர்கள் கடவுளே அஜித்தே என கோஷமிட்டதை அடுத்து, "நானும் அஜித் ரசிகர் தான்" என்று அவர் கூறியது மாணவர்கள் மத்தியில் கரகோஷத்தை ஏற்படுத்தியது.
திருப்பூரில் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டிடிவி தினகரன் பரிசுகளை வழங்கி பேசிக் கொண்டிருந்தார். மாணவர்களில் சிலர் திடீரென கடவுளே அஜித்தே என கோஷமிட்டனர். இதனை அடுத்து அவர் தனது பேச்சை நிறுத்திவிட்டு, கோஷம் ஓய்ந்த பிறகு தனது பேச்சை தொடர்ந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், "நான் பேச தொடங்கிய போது மாணவர்கள் சிலர் 'கடவுளே அஜித்தே என கோஷமிட்டனர். எனக்கு அந்த கோஷம் முதலில் தெளிவாக கேட்கவில்லை. உடன் இருந்தவர்களிடம் 'என்ன கோஷம் போடுகிறார்கள்?' என்று கேட்டேன். அப்போதுதான் அவர்கள் கடவுளே அஜித்தே என்று கோஷம் போடுவதாக தெரிவித்தனர்.
"நானும் அஜித் ரசிகன் தான். ஒரு நடிகராக எனக்கு அஜித் ரொம்ப பிடிக்கும் என்று நானே பல பேட்டிகளில் கூறியுள்ளேன். பல குழந்தைகளுக்கு நானே 'அஜித்குமார்' என்று பெயர் வைத்துள்ளேன்," என்று கூறினார்.