தமிழக அரசு, தனது சேவைகளை மக்களிடம் மிக விரைவாகவும், எளிமையாகவும் கொண்டு சேர்க்கும் நோக்கில், மெட்டா நிறுவனத்துடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, இனி தமிழக மக்கள் வாட்ஸ்-ஆப் மூலமாக 50 அத்தியாவசிய அரசு சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தமிழகம் முழுவதும் உள்ள மக்கள், ஒரே ஒரு எண்ணின் மூலம் அணுகக்கூடிய ஒரு சாட்பாட் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் 50க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை பெற முடியும். இந்த வசதி முதல் கட்டமாகத் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வழங்கப்படும்.
இதன்மூலம் மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம் மற்றும் இதர வரிகளைச் செலுத்து முடியும். மேலும் மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளைப் பெறுதல் மற்ற அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த 50 சேவைகளை இந்த சாட்பாட் மூலம் பெற முடியும்.
இந்த ஒப்பந்தம் குறித்துப் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "மக்களை மையமாக கொண்ட, வெளிப்படையான மற்றும் உறுதியான நிர்வாகத்தை உருவாக்குவதுதான் தமிழக அரசின் தொலைநோக்கு. மெட்டா நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது, அந்தப் பயணத்தில் ஒரு முக்கியமான படி" என்று கூறினார்.