தலைமை ஆசிரியர் மட்டும் பலிகடா ஏன்? சி.இ.ஓ மீது ஏன் நடவடிக்கை இல்லை? திருச்சி சூர்யா

Siva

ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (17:00 IST)
மகா விஷ்ணு விவகாரத்தில் தலைமை ஆசிரியர் மட்டும் பலிகடா ஏன்? சி.இ.ஓ மீது ஏன் நடவடிக்கை இல்லை? என திருச்சி சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார். அவர் இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
 
அரசு பள்ளிகளில் பெரும்பாலும் ஏழை குழந்தைகளே பயின்று வருகிறார்கள். நான் உங்களோடு இருக்கிறேன் என்று பல்வேறு திட்டங்களை அறிவித்து மாணவர்களை ஊக்குவித்து கொண்டிருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள். 
கல்விதான் நம்மை உயர்த்தும் என்று திராவிட மாடல் அரசு விதைத்த நம்பிக்கையின் இன்றைய விதைகள் அவர்கள். நம்பிக்கையோடு படியுங்கள், கல்வி எல்லாவற்றையும் மாற்றும் சக்தி கொண்டது என்ற நம்பிக்கையை ஊட்டி விட்டு, அதை குலைக்கும் விதமாக, நீங்களே மாற்றுத்திறனாளியாக பிறப்பதும், ஏழையா பிறப்பதும் முன் ஜென்ம பலன் என்று  சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மகாவிஷ்ணு என்ற ஆன்மீக போதகர்   பேச ஏற்பாடு செய்வது என்ன நியாயம்?
 
இதை கேட்கும் ஏழை மாணவர்கள், தங்கள் ஏழ்மையும், கற்றல் குறைபாடும் முன் ஜென்ம பலன் என்று மனம் தளர்ந்து போய்விட மாட்டார்களா? இது எவ்வளவு பெரிய வன்முறை?
 
அரசு பள்ளிக்கே நேரடியாக வந்து,  தன்னை ஆன்மீக சொற்பொழிவாளராக பதவி உயர்வு செய்து கொண்ட பத்தாம் வகுப்பு கூட படிக்காத ஸ்டாண்டப் காமெடியன் ’பரம்பொருள் விஷ்ணு’வால் இப்படி ஒரு விசக்கருத்தை கக்க முடிந்திருக்கிறதென்றால் அதற்கு யார் காரணம்? 
 
இதில் சி.இ.ஓவுக்கு முக்கியமான பங்கிருக்கிறது, நான் அவருடைய ஆள் என்று ஆசிரியர் சங்கரிடமே சி.இ.ஓவை விட உங்களுக்கு அறிவு அதிகமா? என்று  சூசகமாக மகாவிஷ்ணு மிரட்டினாரே? அதைப் பற்றி ஏன் யாரும் பேசவில்லை வெறும் தலைமை ஆசிரியரை பணியிடை மாற்றம் செய்துவிட்டு சி.இ.ஓவை காப்பாற்றுவதற்கு ஏன் முயற்சி செய்கிறீர்கள்?
 
பள்ளிக்கல்விதுறை அமைச்சர் ஆசிரியர் சங்கரை பாராட்டி சால்வை போர்த்தி பாராட்டிவிட்டு, மகாவிஷ்ணுவை காட்டமாக விமர்சித்தார். ஆனால், இந்த காட்டமான பேட்டி மட்டுமே போதுமானதா?
 
தலைமை ஆசிரியர் தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டிருக்கிறார் இது போதுமானதா? மகாவிஷ்ணு கைதோடு இது முடிந்து போகிற பிரச்சினையா? 
 
தமிழரசி மட்டும்தான் குற்றவாளியா? அவர் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்திருக்க முடியுமா?அதிகாரிகளின் செல்வாக்கு காரணமாக பேச அழைத்துவிட்டு பேசியவரை கைது செய்து விட்டால் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து விடுமா?
 
* அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் கால்களை கழுவி மாணவர்கள் பாத பூஜை செய்கிறார்கள்.
* அரசு புத்தகக் கண்காட்சி நிகழ்ச்சியில் மாரியம்மன் பாடலை போட்டு மாணவர்கள் சாமி வந்தது போல் ஆடுகிறார்கள்
 
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் பேட்டிகளால் தன்னுடைய இமேஜை சரி செய்து கொள்ள முயல்வதற்கு மாறாக, இது போன்ற சம்பவங்கள் இனி நடந்தேறாத அளவிற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?
 
துறையின் அமைச்சராக தனக்கு கீழ் நடக்கும் தவறுக்கு முழுமையான பொறுப்பேற்று அதை  சரி செய்ய அமைச்சர் அன்பில் மகேஷ் முன்வர வேண்டும்.   #Resign_AnbilMahesh என்ற ஹஸ் டேக் எதிர்க்கட்சியினர்களால் ட்ரெண்டு செய்யப்படவில்லை  உங்களுடைய கட்சி மற்றும் கொள்கை சார்ந்தவர்களால் ட்ரெண்ட் செய்யப்படுகிறது என்றால், எங்கே குறை உள்ளது என்பதை அவசரகதியில் சரி செய்ய வேண்டிய நேரம் இது  அன்பில் மகேஷ்.
 
கடைசியாக ஒன்றே ஒன்றுதான். கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு வருகிற அளவுக்கு நிர்வாகத்தில் கவனமில்லால இருக்காதீர்கள், நிர்வாகத்தில் கவனம் செலுத்துங்கள் மீண்டும் தவறு நடக்காத அளவுக்கு நடவடிக்கை எடுங்கள்.நீங்கள் வகிக்கும் இலாகா தமிழகத்தின் எதிர்கால சந்ததிகளை மெருகேற்றும் ஒரு முக்கியத்துறை.மாணவர்களுக்கு அரசு கொடுக்கும் சலுகைகளை மீறி இது போன்ற சம்பவங்களால் அவர்கள் எதிர்காலத்தை வீணாக்கி விடக்கூடாது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்