ஜல்லிக்கட்டு காளையை அடக்கினால் 200 ரூபாய் தருவேன் என்று சொன்னதை நம்பி, பத்தாம் வகுப்பு மாணவன் அந்த காளையை அடக்க முயன்ற நிலையில், காலை முட்டியதால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் அருகே வல்லம் என்ற பகுதியைச் சேர்ந்த தீரன் என்ற பத்தாம் வகுப்பு மாணவன், நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, ஜல்லிக்கட்டு காளையை பிடிக்க முயற்சித்துள்ளார். அப்போது, தீரனின் மார்பில் ஜல்லிக்கட்டு காளையின் கொம்பு குத்தியதால் பலத்த காயம் அடைந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது, செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இது குறித்து மாணவனின் பெற்றோர் கூறியபோது, ஜல்லிக்கட்டு காளையின் உரிமையாளர், மாட்டுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கத்தில் மாணவர்களிடம் "காளையை அடக்கினால் 200 ரூபாய் தருகிறேன்" என்று கூறினார். 200 ரூபாய் பணத்துக்கு ஆசைப்பட்டு தான், மாணவன் தீரன் காளையை அடக்க முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
எனவே, ஜல்லிக்கட்டு காளையின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.