நாளை கந்தசஷ்டி திருவிழா: மக்கள் கூட்டத்தில் திருச்செந்தூர்!
வெள்ளி, 1 நவம்பர் 2019 (14:07 IST)
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை கந்தசஷ்டி திருவிழா நடைபெறுவதையொட்டி மக்கள் கூட்டம் குவிய தொடங்கியுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 28ம் தேதி தொடங்கியது. நவம்பர் 8ம் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை நடைபெற இருக்கிறது.
இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் திருச்செந்தூருக்கு பயணித்து வருகின்றனர். நாளை சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பல ஊர்களில் இருந்தும் திருச்செந்தூருக்கு நேரடி பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நாளை சிறப்பு அபிஷேகங்கள், உச்சிக்கால பூஜை ஆகியவை முடிந்து மாலை 4 மணியளவில் முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெருகிறது. தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இரவு கந்தன் – தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
விழாக்காலங்கள் முழுவதும் பக்தர்கள் கண்டு களிக்க கோவில் கலையரங்கில் பக்தி சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன.